

கொழும்புவில் நடைபெற்ற 2-வது ஒருநாள் போட்டியில் 289 ரன்கள் இலக்கை எதிர்கொண்ட ஆஸ்திரேலியா 206 ரன்களுக்குச் சுருண்டு தோல்வியடைந்தது.
இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடர் இப்போதைக்கு 1-1 என்ற் சமன் ஆகியது. இலங்கையின் இடது கை சுழற்பந்து வீச்சாளர் அமில அபோன்சோ 18 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்த திசர பெரேரா அருமையாக வீசி தொடக்க விக்கெட்டுகளுடன் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்ற ஆஸ்திரேலியா 82 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி தழுவியது.
தொடக்கத்திலேயே வார்னரை எட்ஜ் செய்ய வைத்தார் பெரேரா, பிறகு அதிரடி வீரர் பிஞ்ச் 4 ரன்களுக்கு பெரேராவிடம் அவுட் ஆக 16/2 என்ற நிலையில் ஸ்மித் களமிறங்கி 30 ரன்களை 5 பவுண்டரிகளுடன் 34 பந்துகளில் விளாசி அதிரடி காட்டினார், ஆனால் அவருக்கு என்ன அவசரமோ அபான்சோ பந்தை தூக்கி அடிப்பதில் தோல்வி கண்டு மிட் ஆனில் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
பெய்லி (27), மேத்யூ வேட் இணைந்து 41/3 என்ற நிலையிலிருந்து ஸ்கோரை மெல்ல 102 ரன்களுக்குக் கொண்டு சென்றனர், ஆனால் இலங்கை பவுலிங் ஆஸ்திரேலிய ரன் விகிதத்தை கட்டுப்பாட்டில் வைத்திருந்தது, இதனால் ஜார்ஜ் பெய்லி 27 ரன்களில் அபான்சோ பந்தில் பவுல்டு ஆனார். 46 பந்துகளில் பவுண்டரியே அடிக்க முடியாமல் 27 ரன்களில் பெய்லி அவுட் ஆனது அணிக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தியது.
மோய்சஸ் ஹென்ரிக்ஸ் 16 பந்துகளில் 4 ரன்களையே எடுத்து செகுகே பிரசன்னாவின் லெக் ஸ்பின்னில் சந்திமால் ஸ்டம்ப்டு செய்ய ஆட்டமிழந்தார்.
வேட், டிராவிஸ் ஹெட் (31) தவிர்க்க முடியாத தோல்வியை தங்களது இன்னிங்ஸினால் தாமதம் செய்ய மட்டுமே முடிந்தது, வேட் 88 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் 27 ரன்கள் எடுத்து திசர பெரேராவின் 3-வது விக்கெட்டாக வீழ்ந்தார். ஆல்ரவுண்டர் பாக்னர்13 ரன்களில் அபான்சோவிடம் எல்.பி.ஆனார். ஸ்டார்க் ரன் எடுக்காமல் மேத்யூஸிடம் அவர் பவுலிங்கில் அவரிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
ஆடம் ஸாம்ப்பா விக்கெட்டை அபான்சோ வீழ்த்த லயன் 4 ரன்களில் நாட் அவுட். 182/5 என்ற நிலையிலிருந்து 206 ரன்களுக்கு 48-வது ஓவரில் சுருண்டு ஆஸ்திரேலியா மீண்டும் ஸ்பின் பலவீனத்தில் படுதோல்வி அடைந்தது. அபோன்சோ 9.2 ஓவர்கள் 18 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இவரை ரன்கள் அடிப்பது சுலபமாக இல்லை. திசர பெரேரா 5 ஓவர்களில் 33 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஆட்ட நாயகனாக மேத்யூஸ் தேர்வு செய்யப்பட்டார்.