

ஐபிஎல் தொடரில் நேற்று மும்பையில் ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற மும்பை கேப்டன் ரோஹித் சர்மா பீல்டிங்கை தேர்வு செய்தார்.
முதலில் பேட் செய்த புனே அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 160 ரன்கள் சேர்த்தது.
ராகுல் திரிபாதி 31 பந்துகளில், 2 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 45 ரன்களும், ரஹானே 32 பந்துகளில், ஒரு சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 38 ரன்களும் சேர்த்து கரண் சர்மா பந்தில் ஆட்டமிழந்தனர். கேப்டன் ஸ்மித் 17 ரன்களில் ஹர்பஜன் சிங் பந்திலும், தோனி 7 ரன்களில் பும்ரா பந்தில் போல்டாகினர்.
பென் ஸ்டோக்ஸ் 17 ரன்களில் ஜான்சன் பந்தில் போல்டானார். மனோஜ் திவாரி அதிரடியாக விளை யாடி 13 பந்துகளில் 4 பவுண்டரி களுடன் 22 ரன்கள் சேர்த்தார்.
மும்பை அணி தரப்பில் கரண் சர்மா, பும்ரா ஆகியோர் தலா 2 விக்கெட்கள் கைப்பற்றினர். இதையடுத்து 161 ரன்கள் இலக்குடன் மும்பை அணி பேட் செய்தது. ஜாஸ் பட்லர் 17, நிதிஷ் ராணா 3, பார்த்தீவ் படேல் 33, கரண் சர்மா 11 ரன்களில் ஆட்டமிழந்தனர். 86 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்த நிலையில் ரோஹித் சர்மா அதிரடியாக விளையாடினார்.
கடைசி 4 ஓவர்களில் வெற்றிக்கு 39 ரன்கள் தேவைப்பட்டது. இம்ரன் தகிர் வீசிய 17-வது ஓவரின் முதல் பந்தில் பொலார்டு(9) ஆட்டமிழந்தார். இந்த ஓவரில் 4 ரன்கள் மட்டுமே சேர்க்கப்பட்டது. உனத்கட் வீசிய அடுத்த ஓவரில் ரோஹித் சர்மா, ஹர்திக் பாண்டியா ஆகியோர் தலா ஒரு பவுண்டரிகள் விரட்ட 11 ரன்கள் கிடைத்தது.
19-வது ஓவரை வீசிய பென் ஸ்டோக்ஸ் 7 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார். இதனால் மும்பை அணிக்கு கடைசி ஓவரில் 17 ரன்கள் தேவைப்பட்டது. உனத்கட் வீசிய முதல் பந்தில் ஹர்திக் பாண்டியா(13) ஆட்டமிழந்தார். அடுத்த பந்தை ரோஹித் சர்மா சிக்ஸருக்கு விளாசினார்.
3-வது பந்தை உனத்கட் மிகவும் அகலமாக வீசினார். ரோஹித் சர்மா முறையிட்ட போதும் நடுவர் வைடு கொடுக்க மறுத்தார். 4-வது பந்தை ரோஹித் சர்மா தூக்கி அடிக்க அது உனத்கட்டிடமே கேட்ச்சாக மாறியது. ரோஹித் சர்மா 39 பந்துகளில் 58 ரன்கள் சேர்த்தார். அடுத்து களமிறங்கிய மெக்லீனகன் ரன் ஏதும் எடுக்காத நிலையில் ரன் அவுட் ஆனார்.
கடைசி பந்தில் ஹர்பஜன் சிங் சிக்ஸர் விளாசியதும் அது வெற்றிக்கு போதுமானதாக அமையவில்லை. 20 ஓவர்கள் முடிவில் மும்பை 8 விக்கெட்கள் இழப்புக்கு 157 ரன்கள் எடுத்தது. இதனால் 3 ரன்கள் வித்தியாசத்தில் புனே அணி வெற்றி பெற்றது. புனே அணிக்கு இது 4-வது வெற்றியாக அமைந்தது. அதேவேளையில் மும்பை அணி 2-வது தோல்வியை சந்தித்தது.