Published : 28 Jan 2017 05:04 PM
Last Updated : 28 Jan 2017 05:04 PM

கவுரவ டாக்டர் பட்டத்தை மறுத்த ராகுல் திராவிட்: கவுதம் கம்பீர் நெகிழ்ச்சிப் பாராட்டு

பெங்களூரு பல்கலைக் கழகம் ராகுல் திராவிடுக்கு கவுரவ டாக்டர் பட்டம் அளிக்கவிருந்தது, ஆனால் ராகுல் திராவிட் அதனை ஏற்க மறுத்து விட்டார், திராவிட் மறுத்ததை கவுதம் கம்பீர் பாராட்டியுள்ளார்

வெள்ளிக்கிழமையன்று பெங்களூரு பல்கலைக் கழகம் ராகுல் திராவிடுக்கு விளையாட்டில் அவரது பங்களிப்புக்காக கவுரவ டாக்டர் பட்டம் வழங்குவதாக அறிவித்திருந்தது, ஆனால் எப்போதுமே விளம்பரத்தையும், அனாவசிய பெருமைகளையும் மறுத்து வந்துள்ள ராகுல் திராவிட் விளையாட்டுத்துறையில் உண்மையாகவே ஆராய்ச்சி செய்து ஏதாவது பங்களிப்பு செய்து உண்மையான கல்விப்புல டாக்டர் பட்டத்தை தான் உழைத்துத்தான் பெற வேண்டுமே தவிர கவுரவ டாக்டர் பட்டம் பெற விரும்பவில்லை என்று பல்கலைக் கழக அழைப்பை ஏற்க மறுத்தார்.

ராகுல் திராவிடின் இந்தச் செயலை கவுதம் கம்பீர் நெகிழ்ச்சியுடன் பாராட்டியுள்ளார்.

கம்பீர் தனது ட்வீட்டில், “பெங்களூரு பல்கலைக் கழகத்தின் கவுரவ டாக்டர் பட்டத்தை மறுத்த ராகுல் திராவிடை நினைக்க பெருமையாக உள்ளது. அதனை தான் ஆராய்ச்சி செய்து பெற வேண்டும் என்று கூறி மறுத்துள்ளார், இதுதான் சரியான அணுகுமுறை.

எந்த ஒரு துறையாக இருந்தாலும் இத்தகைய கவுரவ டாக்டர் பட்டங்கள் கூடாது என்றே நான் கருதி வருகிறேன். என் நாட்டுக்குத் தேவை உண்மையான ஹீரோக்கள், கவுரவ ஹீரோக்கள் அல்ல” என்று பதிவிட்டுள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவிக்கும் போது பிரியாவிடை போட்டியையே மறுத்தவர் திராவிட், அப்போது அவரிடம் கேட்ட போது, ஓய்வு பெறுவது என்று முடிவெடுத்து விட்ட பின் இன்னொரு போட்டி என்பது பிரியாவிடை போட்டியாகவே இருந்தாலும் அது இன்னொருவர் வாய்ப்பைப் பறிப்பதாகும் என்று கூறியது இத்தருணத்தில் நினைவுகூரத் தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x