

இந்திய மகளிர் ஹாக்கி அணியில் இடம் பெற்றுள்ள பூணம் ராணி, சான்சன் தேவி ஆகியோர் 100 சர்வதேச போட்டிகளில் விளையாடி சாதனை படைத்துள்ளனர். இருவருமே முன்கள வீராங்கனைகள் ஆவர்.
பூணம் ராணி ஹரியாணா மாநிலத்தைச் சேர்ந்தவர். 2009-ம் ஆண்டு முதல் இந்திய அணியில் விளையாடி வருகிறார். அதே ஆண்டு ஜுனியர் மகளிர் உலகக் கோப்பை ஹாக்கி போட்டியிலும் அவர் பங்கேற்றார்.
ஐரோப்பாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் அணி கடந்த வாரம் அயர்லாந்துக்கு எதிராக விளையாடியது. இந்தப் போட்டி பூணம் ராணியின் 100-வது போட்டியாக அமைந்தது. அணியில் இடம் பிடித்ததில் இருந்து ஏறக்குறைய இந்திய அணி பங்கேற்ற அனைத்துப் போட்டிகளிலும் பூணம் ராணி விளையாடியுள்ளார்.
சான்சன் தேவி மணிப்பூரை சேர்ந்தவர். அவரும்
2009-ம் ஆண்டு முதல் இந்திய அணிக்காக விளையாடி வருகிறார். ஸ்காட்லாந்தில் நடைபெற்று வரும் மகளிர் சர்வதேச சாம்பியன்ஸ் சேலஞ்ச் போட்டியில் தென்கொரியாவுக்கு எதிரான போட்டி சான்சன் தேவிக்கு 100-வது போட்டியாக அமைந்தது.-பி.டி.ஐ.