

இந்தியாவுக்கு எதிரான தொடரில் விளையாடுவது, ஆஷஸ் டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய வீரர்களுக்கு உதவும் என்று முன்னாள் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பிரெட் லீ தெரிவித்துள்ளார்.
ஆஷஸ் தொடருக்கு முன்னதாக சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான இந்திய ஆடுகங்களில் ஆஸி. விளையாடுவது அர்த்தமற்றது. ஆஸி. தோற்குமானால் அது வீரர்களின் நம்பிக்கையை குலைத்துவிடும் என்று முன்னாள் கேப்டன் இயான் சேப்பல் சாடியிருந்த நிலையில், பிரெட் லீ மேலும் கூறியிருப்பது:
ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள நேரம் சரியானதாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் வெப்பமும், புழுதியும் நிறைந்த இந்திய சூழலில் விளையாடுவது ஆஸ்திரேலிய அணியினருக்கு மிக நல்ல வாய்ப்பாகும். இங்கு விளையாடும்போது, கடினமான சூழல்களில் விளையாடக்கூடிய ஆற்றல் ஆஸ்திரேலிய வீரர்களுக்கு கிடைக்கும். நான் இங்கு விளையாடிய காலங்களில் நிறைய விஷயங்களை கற்றிருக்கிறேன். இந்தத் தொடர் ஆஸ்திரேலிய வீரர்களுக்கு நல்ல அனுபவமாக இருக்கும். அது இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலிய வீரர்கள் சிறப்பாக விளையாடுவதற்கு உதவும் என்றார்.