Published : 17 May 2017 04:10 PM
Last Updated : 17 May 2017 04:10 PM

நடப்பு ஐபிஎல் தொடரில் வேகப்பந்து வீச்சுக்கு எதிராக தோனி அபாரம்!

நடப்பு ஐபிஎல் தொடரில் புனே அணியை நேற்று இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறச் செய்த அதிரடி ஆட்டத்தை ஆடிய தோனி, வேகப்பந்து வீச்சுக்கு எதிராக அதிக ரன்களை எடுத்துள்ளார்.

நேற்று மந்தமான மும்பை பிட்சில் ரன்கள் எடுக்க கடும் சிரமமாக இருந்த நிலையில் தோனியும் கூட முதல் 17 பந்துகளில் 14 ரன்கள் என்றே இருந்தார். இதில் ஒரு சிக்ஸ் அடித்திருந்தாலும் அவர் நிதானத்தை தவறவிடவில்லை.

பிட்சை நன்றாகப் புரிந்து கொண்ட தோனி, காத்திருந்தார், விக்கெட் விழுந்தாலும் பரவாயில்லை எப்போது அடித்து ஆட வேண்டும் என்ற கணக்கில் தோனியின் துல்லியம் அவரது சிறப்பம்சம் என்பதை நாம் இத்தனையாண்டுகால அவரது பின் கள ஆட்டத்தை பார்த்ததன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

நேற்றும் 17 பந்துகளில் 14 என்று இருந்த தோனி அதன் பிறகு 4 சிக்சர்களை விளாசி 26 பந்துகளில் 40 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார்.

சமீப காலங்களில் தோனியைக் கட்டுப்படுத்த வைடாக வீசுவது என்ற உத்தி கடைபிடிக்கப்பட்டு வந்தது. ஸ்பின்னர்கள் தோனி கையை வேகமாகச் சுழற்ற வாய்ப்பளிக்காமல் வீசி வந்தனர்.

நேற்று மெக்லெனகன் வீசிய போது கிரீசில் உள்ளாக நின்று முன்னங்காலை விலக்கி அவர் பந்தை மிட்விக்கெட்டில் சிக்ஸ் விளாசினார். அடுத்தபடியாக மெக்லெனகன் வைடு உத்தியைக் கடைபிடித்தார், ஆனால் அது மிகவும் வெளியே சென்று வைடு என்று அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து மீண்டும் அவர் ஒரு பந்தை தோனியின் ரீச்சுக்கு வீச வேண்டிய நிர்பந்தம் எழ, லாங் ஆனில் சிக்ஸ் பறந்தது. பிறகு 20-வது ஓவரில் ஜஸ்பிரித் பும்ரா பந்தில் தன் முதல் சிக்ஸரையும் அடித்தார் தோனி. கடைசி 2 ஓவர்களில் 41 ரன்கள் எடுக்கப்பட்டதில் தோனி 4 சிக்சர்களுடன் 26 ரன்கள் பங்களிப்பு செய்தார். மொத்தம் 26 பந்துகளில் 40 ரன்கள், இதில் 5 சிக்சர்கள். ஸ்ட்ரைக் ரேட் 153.84.

இந்த ஐபிஎல் தொடரில் தோனி 280 ரன்களில் 191 ரன்களை வேகப்பந்து வீச்சுக்கு எதிராக எடுத்துள்ளார். ஸ்ட்ரைக் ரேட் 146, இதில் மும்பைக்கு எதிராக தோனியின் ஸ்ட்ரைக் ரேட் 182 என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், ஐபிஎல் பிளே ஆஃப் போட்டிகளில் மும்பைக்கு எதிராக தோனியின் சராசரி 64.67. அவரது 3 பெரிய ஸ்கோர்கள் மும்பைக்கு எதிராக எடுக்கப்பட்டதே.

தோனியின் இந்த முக்கியமான பங்களிப்பை விதந்தோதிய கேப்டன் ஸ்மித், “பெரிய போட்டி, பெரிய வீரர்கள் எழுச்சிபெற்றனர், முடிவில் தோனியின் ஆட்டம் அபாரம்” என்று பாராட்டினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x