Published : 20 Nov 2013 05:53 PM
Last Updated : 20 Nov 2013 05:53 PM

மே.இ.தீவுகள் அணியை குறைந்து மதிப்பிட முடியாது: தோனி

டெஸ்ட் தொடரைக் கருத்தில்கொண்டு, மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடரையும் எளிதில் கைப்பற்றிவிடலாம் என்று எண்ணுவது தவறு என்று இந்திய அணியின் கேப்டன் மஹேந்திர சிங் தோனி கூறியுள்ளார்.

இந்திய அணி டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது. ஆனால், ஒரு நாள் கிரிக்கெட் தொடரின் அமைப்பு, மேற்கிந்திய தீவுகளின் வீரர்களுக்கு ஏற்றதாக இருக்கலாம். அவர்களுக்கு எதிராக ரன்கள் குவிப்பது கடினமாக இருக்கும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, கொச்சியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தோனி, "மேற்கிந்திய தீவுகள் ஒரு சிறந்த அணி. டெஸ்ட் ஆட்டங்கள் மூன்றாவது நாளே முடிந்துவிட்டதனால், அவர்களுக்கு எதிராக விளையாடுவது அவ்வளவு கடினம் இல்லை என்று நீங்கள் எண்ணலாம். ஆனால், அந்த ஆட்டங்கள் அப்படி இருக்கவில்லை. பல தருணங்களில், நாங்கள் நெருக்கடிக்கு தள்ளப்பட்டு, ஒரு பார்டனர்ஷிப்பினை நிலைக்க வைத்து ஆடியே மீண்டுள்ளோம். எனவே, எங்கள் ஸ்கோர்களைப் பார்த்து, அந்தத் தொடர் எளிதாக இருந்தது என எண்ண வேண்டாம்.

எதிரணியின் பலம், பலவீனத்தை விட்டுவிட்டு, எங்கள் மனதை சரியாக வைத்துக் கொண்டு ஆடுவதே முக்கியம் என நினைக்கிறேன்" என்றார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சமீபத்திய ஒரு நாள் தொடரில், அனைத்து ஆட்டங்களிலுமே, அதிகமாக ரன்கள் குவித்ததைப் போல, இந்தத் தொடரிலும் முடியுமா என கேட்டபோது, "இந்த நிலையில் எதையும் யூகிக்க முடியாது. அனைத்துமே பிட்ச்களின் தன்மையைப் பொறுத்தே அமையும். தொடர் ஆரம்பிப்பதற்கு முன் போட்டியில் அதிக ரன்களை எடுப்போம் என சொல்வது சுலபமல்ல.

ஆட்டத்தின் இறுதி ஓவர்களில் சிறப்பாக பந்துவீச இந்திய பௌலர்கள் கடும் பயிற்சி மேற்கொண்டுள்ளனர். அதன் தாக்கம் ஆட்டத்தில் எதிரொலிக்கும்.

பௌலர்கள் அனைவருமே தங்கள் முழு முயற்சியையும் அளிக்கிறார்கள். அதன் காரணமாக நல்ல முன்னேற்றத்தை பார்க்க முடிகிறது. அது ஆட்டத்திலும் சிறப்பாக வெளிப்படும் என நம்புகிறேன்" என்றார் கேப்டன் தோனி.

இவ்விரு அணிகளும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகின்றன. அதன் முதல் போட்டி வரும் நாளை (வியாழக்கிழமை) நடைபெறுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x