Last Updated : 06 Feb, 2017 10:52 AM

 

Published : 06 Feb 2017 10:52 AM
Last Updated : 06 Feb 2017 10:52 AM

இந்தியா ஏ அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் வங்கதேசம் திணறல்

இந்தியா ஏ அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் பேட்டிங்கில் திணறிய வங்கதேச அணி 8 விக்கெட் இழப்புக்கு 224 ரன்களை எடுத்தது. இதைத்தொடர்ந்து ஆடிய இந்தியா ஏ அணி ஆட்டநேர முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 91 ரன்களை எடுத்திருந்தது.

வங்கதேச கிரிக்கெட் அணி தற்போது இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி 9-ம் தேதி ஐதரா பாத்தில் தொடங்கவுள்ளது. இந்த டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக இந்தியா ஏ அணிக்கு எதிரான 2 நாள் பயிற்சி ஆட்டத்தில் வங்கதேசம் நேற்று களம் இறங்கியது.

டாஸில் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான தமிம் இக்பாலும் (13 ரன்கள்), இம்ருல் கேயெஸ்ஸும் (4 ரன்கள்) அடுத்தடுத்து ஆட்டம் இழக்க, வங்கதேச அணியின் ஆரம்பமே ஆட்டம் கண்டது. இந்த சரிவில் இருந்து கடைசிவரை வங்கதேச அணியால் மீள முடியவில்லை. சவுமியா சர்க்கார் (52 ரன்கள்), கேப்டன் முஷ்பிகர் ரஹிம் (58 ரன்கள்) ஆகியோர் அரைசதம் எடுத்தபோதிலும் சீரான இடைவெளி யில் விக்கெட்கள் வீழ்ந்ததால் வங்கதேச அணியால் வலுவான ஸ்கோரை எட்ட முடியவில்லை.

67 ஓவர்களில் 224 ரன்களுக்கு 8 விக்கெட்களை இழந்த நிலையில் ஆட்டத்தை டிக்ளேர் செய்வதாக வங்கதேச அணியின் கேப்டன் முஷ்பிகர் ரஹிம் அறிவித்தார். இப்போட்டியில் இந்தியா ஏ அணியில் அனிகெட் சவுத்ரி 4 விக்கெட்களை வீழ்த்தினார். மிலிந்த், விஜய் சங்கர், நதீம், குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.

வங்கதேச அணியைத் தொடர்ந்து ஆடவந்த இந்தியா ஏ அணியில் அபினவ் முகுந்த் 16 ரன்களில் அவுட் ஆனார். ஆட்டநேர இறுதியில் இந்தியா ஏ அணி 1 விக்கெட் இழப்புக்கு 91 ரன்களை எடுத்திருந்தது. பாஞ்சால் 40 ரன்களுடனும், ஷ்ரேயாஸ் ஐயர் 29 ரன்களுடனும் ஆடிக்கொண்டிருந்தனர்.

சாஹா கருத்து

இந்நிலையில் டெஸ்ட் போட்டியில் பங்கேற்பதற்காக இந்திய அணியின் விக்கெட் கீப்பர் விருத்திமான் சாஹா நேற்று கொல்கத்தாவில் இருந்து ஐதராபாத்துக்கு புறப்பட்டார். அப்போது நிருபர்களிடம் அவர் கூறியதாவது:

தரவரிசைப்படி வங்கதேச அணி பலவீனமாக இருந்தாலும், அந்த அணியை இந்தியா குறைத்து மதிப்பிடவில்லை. மிகுந்த கவனத்துடன் அந்த அணியை எதிர்கொள்வோம். களத்தில் சூழ்நிலைக்கு தகுந்தபடி செயல்பட்டு வங்கதேச அணியை வீழ்த்துவோம். இந்தத் தொடர் முடிந்த பிறகே ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து திட்டமிடுவோம். டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இந்திய அணி தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருவது மகிழ்ச்சி அளிக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.







FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x