ரியோ ஒலிம்பிக்கில் போபண்ணா ஜோடி லியாண்டர் பயஸ்: டென்னிஸ் கூட்டமைப்பு அறிவிப்பு

ரியோ ஒலிம்பிக்கில் போபண்ணா ஜோடி லியாண்டர் பயஸ்: டென்னிஸ் கூட்டமைப்பு அறிவிப்பு
Updated on
1 min read

7-வது முறையாக ஒலிம்பிக் போட்டிகளில் லியாண்டர் பயஸ் விளையாட வாய்ப்பு கிடைத்துள்ளது. ரோஹன் போபண்ணாவுடன் இரட்டையர் ஜோடியாக பயஸ் விளையாட அனைத்திந்திய டென்னிஸ் கூட்டமைப்பு அனுமதி அளித்துள்ளது.

முன்னதாக, ரோஹன் போபண்ணா, சாகேத் மைனெனியை தனது இரட்டையர் ஜோடியாக சேர்த்துக் கொள்ள விருப்பம் தெரிவித்திருந்தார். ஆனால் அனைத்திந்திய டென்னிஸ் கூட்டமைப்பு லியாண்டர் பயஸுக்கு ரோஹன் போபன்னாவுடன் விளையாட ஒலிம்பிக் டிக்கெட் வழங்கியுள்ளது.

அதே போல் கலப்பு இரட்டையரில் போபண்ணாவின் ஜோடியாக சானியா மிர்சா விளையாடவிருக்கிறார். மகளிர் இரட்டையர் பிரிவில் பிரார்த்தனா தொம்பாரே என்பவருடன் சானியா ஒலிம்பிக் போட்டிகளில் விளையாடுகிறார்.

போபண்ணா தனக்கு ஜோடியாக மைனெனியை தேர்வு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்த அனைத்திந்திய டென்னிஸ் கூட்டமைப்பின் தலைவர் அனில் கன்னா கூறும்போது, “சாகேத் மைனீனி எப்படி தனக்கு சரியான இரட்டையர் கூட்டாளியாக இருக்க முடியும் என்பதை விளக்கி போபண்ணா கோரிக்கை வைத்தார். அவரது காரணங்களை விளக்கும் அர்த்தமுள்ள கடிதமாகும் அது, ஆனால் லியாண்டர்-ரோஹன் ஜோடி டேவிஸ் கோப்பை டென்னிஸில் 4 முறை இணைந்து ஆடியுள்ளனர். மேலும் பயஸ் பிரெஞ்ச் ஓபன் கலப்பு இரட்டையர் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

இதனையடுத்து இந்திய அணி பதக்கம் வெல்ல பயஸ் ரியோ செல்ல வேண்டும் என்று கமிட்டி முடிவெடுத்தது” என்று விளக்கம் அளித்தார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in