

ரஷியாவின் சூச்சி நகரில் நடைபெற்று வரும் குளிர்கால ஒலிம்பிக் போட்டியின் விளையாட்டு கிராமத்தில் இந்திய தேசியக் கொடியான மூவர்ணக் கொடி ஏற்றப்பட்டது.
இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் (ஐஓஏ) மீதான தடை நீக்கப்பட்டதைத் தொடர்ந்து குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் மூவர்ணக் கொடி பறக்கவிடப்பட்டிருக்கிறது.
ஐஓஏ தேர்தலின்போது சர்வதேச ஒலிம்பிக் கவுன்சிலின் (ஐஓசி) விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை என்பது உள்ளிட்ட காரணங்களைக் கூறி 2012 டிசம்பர் 4-ம் தேதி ஐஓஏவை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டது ஐஓசி. இதையடுத்து ஐஓஏ மீதான இடைக்கால தடையை நீக்குவதற்காக பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதன் எதிரொலியாக கடந்த 9-ம் தேதி தேர்தல் நடத்தப்பட்டு 11-ம் தேதி தடை நீக்கப்பட்டது.
குளிர்கால ஒலிம்பிக் போட்டி கடந்த 7-ம் தேதி தொடங்கியபோது இந்தியா சார்பில் பங்கேற்ற 3 வீரர்களும் ஐஓசி கொடியின் கீழ் பங்கேற்றனர். இப்போது தடை நீக்கப்பட்டிருப்பதால் இந்தியர்கள் 3 பேரும் இந்தப் போட்டியின் நிறைவு விழாவில் மூவர்ணக் கொடியை ஏந்திச் செல்லும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர். இதன்மூலம் குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றுள்ள நாடுகளின் எண்ணிக்கை இந்தியாவையும் சேர்த்து மொத்தம் 88 ஆக உயர்ந்துள்ளது.