

சச்சின் வாழ்க்கையைச் சொல்லும் 'சச்சின்: எ பில்லியன் ட்ரீம்ஸ்' படத்தை இன்று மாலை (புதன்கிழமை) இந்திய அணியினர் பார்க்கவுள்ளனர். மும்பை வெர்சோவா பகுதியில் இருக்கும் திரையரங்கில் படம் திரையிடப்படுகிறது.
இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் வாழ்க்கை வரலாறு, 'சச்சின்: எ பில்லியன் ட்ரீம்ஸ்' என திரைப்பட வடிவில் உருவாகியுள்ளது. ஜேம்ஸ் எர்ஸ்கின் இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
சச்சினின் 24 வருட கிரிக்கெட் வாழ்க்கை, பல கோடி மக்களின் நம்பிக்கையை அவர் சுமந்த கதை, பல சாதனைகளை முறியடித்து கிரிக்கெட் உலகில் தனித்துவம் பெற்ற கதை என படத்தில் பல சுவாரசியங்கள் இருக்கும் என படக்குழு தெரிவித்துள்ளது.
மே 26-ம் தேதி வெளியாகவிருக்கும் இத்திரைப்படத்தின் பிரத்யேக காட்சி இந்திய கிரிக்கெட் அணிக்காக புதன்கிழமை அன்று திரையிடப்படவுள்ளது. முக்கிய வீரர்கள் அனைவரும் இந்தத் திரையிடலுக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுக்கிறது.
கேரளா, மஹாராஷ்ட்ரா, சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்கள் இந்தப் படத்துக்கு வரிவிலக்கு அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.