Published : 06 Aug 2016 09:02 AM
Last Updated : 06 Aug 2016 09:02 AM

ரியோ ஒலிம்பிக் திருவிழா கோலாகலமாக தொடங்கியது

பிரேசிலின் இரண்டாவது மிகப் பெரிய நகரான ரியோ டி ஜெனிரோவில் 31-வது ஒலிம்பிக் திருவிழா இந்திய நேரப்படி இன்று அதிகாலை 4.30 மணிக்கு கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக தொடங்கியது.

வரும் 21-ம் தேதி வரை மொத்தம் 17 நாட்கள் நடைபெறும் ரியோ ஒலிம்பிக் திருவிழாவில் அமெரிக்கா, சீனா, இந்தியா உட்பட 206 நாடுகளைச் சேர்ந்த 11,239 வீரர் வீராங்கனைகள் கலந்துகொண்டுள்ளனர்.

மொத்தம் 31 விளையாட்டுகளில் 41 பிரிவுகளில் போட்டிகள் நடைபெறுகின்றன. ரக்பி செவன்ஸ், கோல்ப் ஆகிய விளையாட்டுகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன. 306 தங்கப் பதக்கங்கள் வழங்கப்பட உள்ளன. சாவோ பாவ்லோ, பெல்லோ ஹாரிசோன்டி, சல்வேடார், பிரேசில்லா, மனாஸ் ஆகிய 5 நகரங்களில் உள்ள 33 மைதானங்களில் போட்டிகள் நடைபெற உள்ளன.

தொடக்க விழா நிகழ்ச்சிகள் வரலாற்று சிறப்பு வாய்ந்த மரக் கானா மைதானத்தில் அதிகாலை 4.30 தொடங்கியது. வரவேற்புரை முடிவடைந்ததும் ஒலிம்பிக் தீபம் பெரிய கோப்பைரையில் ஏற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து ஒலிம்பிக் கொடியேற்றப்பட்டது. இதன் பின்னர் போட்டிகளில் கலந்து கொண்டுள்ள நாடுகளின் சார்பில் உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது. தொடர்ந்து வீரர் களின் அணிவகுப்பு இடம் பெற்றது.

ஒலிம்பிக்கின் பிறப்பிடம் கிரேக்கம் என்பதால் அந்நாட்டினர் முதல்வரிசையில் கொடியேந்திச் சென்றனர். அதைத் தொடர்ந்து மற்ற நாட்டினர் அணிவகுக்க கடைசியாக போட்டியை நடத்தும் பிரேசில் வீரர், வீராங்கனைகள் அணிவகுத்துச் சென்றனர். இந்திய அணி 95-வது நாடாக அணிவகுப்பில் பங்கேற்றது. துப்பாக்கிச்சுடுதல் வீரர் அபிநவ் பிந்த்ரா தேசியக்கொடியை ஏந்திச்சென்றார்.

தொடக்க விழாவில் சுமார் 5 ஆயிரம் நடன கலைஞர்கள் கலந்து கொண்ட பிரம்மாண்டமான கண்கவர் கலை நிகழ்ச்சிகள் இடம் பெற்றன. இவை பிரேசில் நாட்டின் பண்பாட்டை பிரதிபலிக்கும் வகை யில் இருந்தது. தொடக்க விழாவின் இறுதியாக இரவைப் பகலாக்கும் வாணவேடிக்கைகள் ரியோ டி ஜெனிரோவை அதிர வைத்தது.

ரியோ ஒலிம்பிக்கில் இந்தியா வில் இருந்து 118 வீரர், வீராங் கனைகள் கலந்து கொள்கின்றனர். இந்திய வரலாற்றில் ஒலிம்பிக்கில் அதிக அளவிலான வீரர்கள் பங் கேற்பது இதுவே முதன்முறை யாகும்.

பதக்கப் பட்டியலில் முதலிடத்தைப் பிடிப்பதற்கு வழக்கம்போல் இந்த முறையும் அமெரிக்கா, சீனா இடையேதான் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஊக்கமருந்து விவகாரத்தில் சிக்கிய ரஷிய தடகள வீரர்கள் ஒட்டுமொத்தமாக தடை செய்யப்பட்டுள்ள நிலையில் பிற போட்டிகளில் அந்த நாட்டில் இருந்து 270 வீரர்கள் கலந்து கொள்ள சர்வதேச ஒலிம்பிக் சங்கம் அனுமதி வழங்கியுள்ளது.

அமெரிக்கா 554 பேரை களமிறக்கியுள்ளது. இதில் 292 பேர் வீராங்கனைகள். இதன்மூலம் ஒலிம்பிக் வரலாற்றில் அதிக வீராங்கனைகளை களமிறக்கிய அணி என்ற பெருமை அமெரிக்காவுக்கு கிடைத்துள்ளது. சீனா 413 பேரையும், பிரிட்டன் 366 பேரையும், போட்டியை நடத்தும் பிரேசில் 465 பேரையும் களமிறக்கியுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x