வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட்: இந்திய அணியில் அபிநவ் முகுந்துக்கு வாய்ப்பு- விருத்திமான் சாஹா அணிக்கு திரும்பினார்

வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட்: இந்திய அணியில் அபிநவ் முகுந்துக்கு வாய்ப்பு- விருத்திமான் சாஹா அணிக்கு திரும்பினார்
Updated on
2 min read

வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடும் இந்திய அணி வீரர்கள் தேர்வு நேற்று நடைபெற்றது. இதில் தமிழக வீரர் அபிநவ் முகுந்துக்கு 6 வருடங்களுக்கு பிறகு பிறகு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட் டுள்ளது.

காயம் காரணமாக இங்கிலாந்துக்கு எதிரான கடைசி 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடாத விக்கெட் கீப்பர் விருத்திமான் சாஹாவும் 16 பேர் கொண்ட அணியில் இடம் பிடித்துள்ளார்.

சுமார் 6 மணி நேரம் தாமதமாக இந்த அணி தேர்வு நடைபெற்றது. வினோத் ராய் தலைமையிலான பிசிசிஐ-யின் புதிய நிர்வாகக்குழு, அணி தேர்வு ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க இணை செயலாளர் அமிதாப் சவுத்ரிக்கு அனுமதி வழங்காததால் இந்த தாமதம் ஏற்பட்டது.

பல்வேறு தொலைபேசி அழைப்புகள், மின் அஞ்சல்கள் ஆகியவற்றுக்கு பிறகு தேர்வுக்குழு கூட்டத்தை பிசிசிஐ தலைமை செயல் இயக்குநர் ராகுல் ஜோஹ்ரி நடத்தினார்.

6 வருடங்களுக்கு பிறகு அணிக்கு திரும்பி உள்ள அபிநவ் முகுந்த், இந்த ஆண்டு ரஞ்சி கோப்பை சீசனில் தமிழக அணிக்காக விளையாடி 700 ரன்களுக்கு மேல் குவித்தார். கடைசியாக அவர் 2011-ம் ஆண்டில் மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான சுற்றுப்பயணங்களில் இந்திய அணிக்காக விளையாடி இருந்தார்.

விருத்திமான் சாஹா, இரானி கோப்பையில் இரட்டை சதம் அடித்து உடல் தகுதியை நிருபித் ததன் மூலம் மீண்டும் தனது இடத்தை உறுதிப்படுத்திக்கொண் டுள்ளார். தற்போதைய நிலையில் பார்த்தீவ் படேலை விட சாஹா வையே நாட்டின் நம்பர் ஒன் விக்கெட் கீப்பராக தேர்வுக்குழுவினர் கருதுகின்றனர்.

காயத்தில் இருந்து குணமடைந் துள்ள அஜிங்க்ய ரஹானே, ஜெயந்த் யாதவ், ஹர்திக் பாண்டியா ஆகியோரும் அணிக்கு திரும்பி உள்ளனர். முரளி விஜய், கே.எல்.ராகுல், சேதேஷ்வர் புஜாரா, கருண் நாயர், அஸ்வின், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தேர்வில் எந்த வித பிரச்சினையும் இல்லை. வேகப்பந்து வீச்சாளர்களாக இஷாந்த் சர்மா, புவனேஷ்வர் குமார், உமேஷ் யாதவ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். கூடுதல் சுழற்பந்து வீச்சாளராக அமித் மிஷ்ரா சேர்க்கப்பட்டுள்ளார்.

வங்கதேச அணி ஒரே டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் விளை யாடுவதற்காக இந்த வாரம் இந்தியா வருகிறது. இரு அணிகள் இடையி லான போட்டி வரும் 9-ம் தேதி ஐதராபாத்தில் நடைபெறுகிறது.

இந்திய அணி விவரம்:

விராட் கோலி (கேப்டன்), கே.எல்.ராகுல், முரளி விஜய், சேதேஷ்வர் புஜாரா, அபிநவ் முகுந்த், அஜிங்க்ய ரஹானே, கருண் நாயர், ஹர்திக் பாண்டியா, விருத்திமான் சாஹா, அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, அமித் மிஸ்ரா, ஜெயந்த் யாதவ், இஷாந்த் சர்மா, புவனேஷ்வர் குமார், உமேஷ் யாதவ்.

5 போட்டிகளும் முகுந்தும்

27 வயதான அபிநவ் முகுந்த் இதுவரை இந்திய அணிக்காக 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 211 ரன்கள் சேர்த்துள்ளார். அதிகபட்ச ஸ்கோர் 62 ஆகும். 2011-ம் ஆண்டு ஜூன் மாதம் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட்டில் அறிமுகமானார். அவர் கடைசியாக அதே ஆண்டு ஆகஸ்ட் மாதம் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் விளையாடியிருந்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in