

பல்லக்கிலேயில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை வெற்றி பெற்றாலும், ஆஸ்திரேலிய பேட்டிங் ஜோடி புதிய டெஸ்ட் சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளனர்.
5-ம் நாளான இன்று 268 ரன்கள் வெற்றி இலக்கை எட்டும் கனவுடன் 83/3 என்று களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 157/8 என்று தவிர்க்க முடியாத தோல்வி நிலைக்குச் சென்றது, ஆனால் மழையை எதிர்நோக்கிய ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் பீட்டர் நெவில் மற்றும் ஓ’கீஃப் ஜோடி எப்பாடுப்பட்டாவது போட்டியை டிரா செய்யலாம் என்ற பெரு முயற்சியில் ஈடுபட்டனர். இவர்கள் செய்த இந்த மாரத்தான் முயற்சி ‘ப்ளாக்கத்தான்’ என்ற சிறப்புப் பெயரில் தற்போது வழங்கப்படலாம்.
157/8 என்ற நிலையிலிருந்து 178 பந்துகளைச் சந்தித்து வெறும் 4 ரன்களை மட்டுமே இவர்கள் 9-வது விக்கெட்டுக்காகச் சேர்த்தது புதிய சாதனைக்குக் காரணமாக அமைந்தது.
அதாவது இவர்கள் ரன் விகிதம் ஓவருக்கு 0.13 தான். இதற்கு முன்னர் இந்தியாவுக்கு எதிராக டெல்லியில் தென் ஆப்பிரிக்க ஜோடியான ஹஷிம் ஆம்லா, ஏ.பி.டிவில்லியர்ஸ் இணைந்து 253 பந்துகளில் 27 ரன்களையே சேர்த்தது, அதாவது ஓவருக்கு 0.64 என்ற விகிதத்தில் சேர்த்தது, ஒரு அரிய சாதனையாக இருந்தது.
ஆனால் இன்று ஆஸ்திரேலியாவின் பீட்டர் நெவில், ஓ’கீஃப் ஜோடி 178 பந்துகளில் 4 ரன்கள், அதாவது ஓவருக்கு 0.13 என்ற விகிதத்தில் சேர்த்து புதிய சாதனையைப் படைத்தனர்.