

கண்ணுக்கு எட்டிய தூரத்தையும் தாண்டி பரந்து விரிந்து கிடக்கும் கடற்பரப்பையும், அதில் எழும் ஆக்ரோஷ அலைகளையும், அது எழுப்பும் சப்தத்தையும் அதன் கரையில் இருந்து பார்த்தாலே மனதிற்குள் ஒரு பயம் எழும். அந்த ஆர்ப்பரிக்கும் அலைகளுக்கு நடுவே சற்றும் அச்சமின்றி அசுர வேகத்தில் படகை செலுத்தி சாதித்து வருகிறார் சென்னையைச் சேர்ந்த ஐஸ்வர்யா நெடுஞ்செழியன்.
2009-ம் ஆண்டு முதல் சென்னையைச் சேர்ந்த வர்ஷாவுடன் இணைந்து படகுப் போட்டியில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐஸ்வர்யா,
பிரான்ஸ் என உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள கடல்களில் நடைபெற்ற போட்டிகளில் பங்கேற்றிருக்கிறார். 29 இஆர் படகுப் போட்டியில் ஏராளமான பதக்கங்களைக் குவித்துள்ள ஐஸ்வர்யா, கடந்த பிப்ரவரியில் கத்தார் தலைநகர் தோஹாவில் நடைபெற்ற கல்ப் சர்வதேச படகுப் போட்டியில் வர்ஷாவுடன் இணைந்து வெள்ளிப் பதக்கம் வென்றார். அதன்பிறகு சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற இந்தியா இன்டர்நேஷனல் படகுப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றார்.
யூரோ கோப்பை போட்டியில் பிரான்ஸ், நெதர்லாந்து, ஜெர்மனி, டென்மார்க் நாடுகளில் நடைபெற்ற சுற்றுகளை முடித்துள்ளார். அந்தப் போட்டியில் தற்போதைய நிலையில், ஒட்டுமொத்தப் பிரிவில் 15-வது இடத்திலும், மகளிர் பிரிவில் 2-வது இடத்திலும் ஐஸ்வர்யா-வர்ஷா ஜோடி உள்ளது. யூரோ கோப்பை போட்டியின் இறுதிச்சுற்று இத்தாலியில் நடைபெறவுள்ளது. அது முடிவடையும்போது, மகளிர் பிரிவில் ஐஸ்வர்யா-வர்ஷா ஜோடிக்கு தங்கம் அல்லது வெள்ளிப் பதக்கம் கிடைக்க வாய்ப்புள்ளது.
அடுத்த ஆண்டு தென் கொரியாவில் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வெல்வதுதான் ஐஸ்வர்யாவின் அடுத்த இலக்கு. அது தொடர்பாக அவர் கூறுகையில், “ஆசிய விளையாட்டுப் போட்டியில் 29 இஆர் படகுப் போட்டி சேர்க்கப்பட்டுள்ளது. அதில் நான் தற்போது பங்கேற்று வருகிறேன். அதில் பதக்கம் வெல்ல வேண்டும். அடுத்ததாக 2016-ல் பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் ஒலிம்பிக் போட்டியில் 49 இஆர் எப்எக்ஸ் பிரிவு படகுப் போட்டியில் பதக்கம் வெல்ல வேண்டும். இந்த இரண்டும்தான் இப்போதைய இலக்கு” என்றார்.