

இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியின் ஒரு பகுதியை இந்தியாவிலும் மற்றொரு பகுதியை வெளிநாட்டிலும் நடத்துவது குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) ஆலோசித்து வருகிறது.
ஐபிஎல் போட்டி நடைபெறும் ஏப்ரல், மே மாதங்களில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளதே இதற்குக் காரணம்.
பாதுகாப்பு காரணங்களை கருத்தில் கொண்டு இந்த யோசனை கருத்தில் கொள்ளப்பட்டுள்ளது. எனினும் போட்டியில் எந்த பாதியை இந்தியாவில் நடத்துவது எந்த பாதியை வெளிநாட்டில் நடத்துவது என்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டபின் இது தொடர்பான இறுதி முடிவு எடுக்கப்படும் என்று பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தென்னாப்பிரிக்கா அல்லது இலங்கையில் போட்டிகள் நடத்தப்படலாம் என்று தெரிகிறது. முன்னதாக கடந்த 2009-ம் ஆண்டு பொதுத் தேர்தல் நடைபெற்றபோது, ஐபிஎல் போட்டிக்கு தேவையான பாதுகாப்பை வழங்க முடியாது என்று அரசு தெரிவித்தது. இதையடுத்து அப்போது தென்னாப்பிரிக்காவில் ஐபிஎல் போட்டிகள் நடைபெற்றன.