தோனி அதிரடி வீணானது: பயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்து வெற்றி

தோனி அதிரடி வீணானது: பயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்து வெற்றி
Updated on
1 min read

இங்கிலாந்து லெவன் - இந்தியா ஏ அணிகள் இடையிலான 50 ஓவர்கள் கொண்ட பயிற்சி ஆட்டம் மும்பை பிரபோர்ன் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. பகலிரவாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் மோர்கன் பீல்டிங்கை தேர்வு செய்தார்.

இதையடுத்து பேட் செய்த இந்தியா ஏ அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 304 ரன்கள் குவித்தது. தொடக்க வீரரான மன்தீப் சிங் 8 ரன்களில் ஆட்ட மிழந்தார். மற்றொரு தொடக்க வீரரான ஷிகர் தவண் மந்தமாக ரன் கணக்கை தொடங்கிய போதும் 84 பந்துகளில், 8 பவுண்டரிகள், ஒரு சிக்ஸருடன் 63 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.

அவர் அம்பாட்டி ராயுடுவுடன் இணைந்து 2-வது விக்கெட்டுக்கு 111 ரன்கள் சேர்த்தார். அடுத்து களமிறங்கிய யுவராஜ் சிங் அதிரடியாக விளையாடினார். நிதானமாக விளையாடிய அம்பாட்டி ராயுடு 97 பந்துகளில், 11 பவுண்டரிகள், ஒரு சிக்ஸருடன் சதம் அடித்த நிலையில் ரிட்யர்டு ஹர்ட் முறையில் வெளியேறினார்.

யுவராஜ் சிங்குடன் இணைந்த தோனி அதிரடியில் மிரட்டினார். யுவராஜ் சிங் 48 பந்துகளில், 8 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 56 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். கிறிஸ் வோக்ஸ் வீசிய கடைசி ஓவரில் 23 ரன்கள் விளாசிய தோனி 40 பந்துகளில், 8 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 68 ரன்கள் சேர்த்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

305 ரன்கள் இலக்குடன் பேட் செய்த இங்கிலாந்து லெவன் 48.5 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 307 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

ஜேசன் ராய் 60, அலெக்ஸ் ஹெல்ஸ் 40, ஷேம் பில்லிங்ஸ் 93, ஜாஸ் பட்லர் 46, லயிம் டாவ்சன் 41 ரன்கள் எடுத்தனர். கிறிஸ் வோக்ஸ் 11, அடில் ரஷித் 6 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 5 விக்கெட்கள் கைப்பற்றி னார். 3 விக்கெட்கள் வித்தியாசத் தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து லெவன் அணி தனது 2-வது பயிற்சி ஆட்டத்தில் நாளை அஜிங்ய ரஹானே தலைமையிலான இந்தியா ஏ அணியை எதிர்த்து விளையாடுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in