Published : 29 Nov 2014 07:10 PM
Last Updated : 29 Nov 2014 07:10 PM

எந்த ஒரு சவாலையும் அளிக்காமல் இலங்கையிடம் இங்கிலாந்து தோல்வி

கொழும்புவில் இன்று நடைபெற்ற இலங்கைக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து எந்த வித போராட்டக் குணத்தையும் வெளிப்படுத்தாமல் படுதோல்வி அடைந்தது.

45 ஓவர்களாகக் குறைக்கப்பட்ட போட்டியில் 43 ஓவர்களில் 185 ரன்களுக்கு இங்கிலாந்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. தொடர்ந்து விளையாடிய இலங்கை 34.2 ஓவர்களில் 186/2 என்று 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

குசல் பெரெரா, தில்ஷன் ஆகியோர் ஸ்கோர் 37ஆக இருந்த போது அவுட் ஆயினர். ஆனால் அதன் பிறகு சங்கக்காரா (67), ஜெயவர்தனே (77) ஆகியோர் எங்கு அடிக்கட்டும் என்று கேட்டு கேட்டு அடித்தனர். இங்கிலாந்து பந்துவீச்சிலும் ஆட்டத்திலும் உடல்மொழியிலும் எந்த வித போராட்டக் குணமும் இல்லை.

15-வது முறையாக சங்கக்காரா, ஜெயவர்தனே ஆகியோர் ஒருநாள் போட்டிகளில் சதக்கூட்டணி அமைத்தனர்.

சங்கக்காரா சரியான முறையில் ஆடவில்லை. அவருக்கு கிறிஸ் வோக்ஸ் தன் பந்து வீச்சில் கேட்ச் ஒன்றை கோட்டைவிட்டார். அப்போது சங்கக்காரா 36 ரன்களில் இருந்தார்.

ஆனால் ஜெயவர்தனே அபாரமான லாவகத்துடன் விளையாடினார். இருவரும் இணைந்து கடைசியில் 10 ஓவர்களில் 75 ரன்களை விளாசினர்.

டாஸ் வென்ற அலிஸ்டர் குக் முதலில் பேட் செய்ய முடிவெடுத்தார். ஆனால் ஒருநாள் கிரிக்கெட்டில் அவரால் ஆட முடியவில்லை என்பது இன்னொரு முறை நிரூபணமாகியுள்ளது. 37 பந்துகளில் 22 ரன்களை அவர் மிகவும் வலிநிறைந்த ஒரு ஆட்டமுறையில் எடுத்தார். கடைசியில் தில்ஷன் பந்தை ஒரு மொக்கை ஸ்வீப் அடி டீப் ஸ்கொயர்லெக் திசையில் கேட்ச் கொடுத்தார்.

முதல் ஒருநாள் போட்டியில் அபார சதம் கண்ட மொயின் அலி இன்று 2 ரன்னில் தில்ஷன் பந்தில் பவுல்டு ஆனார். மேலேறி வந்து ஆட முயன்றார் பந்து கால்காப்பில் பட்டு ஸ்டம்பிற்கு சென்றது. தில்ஷன் மொத்தம் 9 ஓவர்கள் வீசி 32 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

இங்கிலாந்து அணியில் அலி, பெல், குக், மோர்கன் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். ரவி பொபாரா 69 பந்துகளில் ஒரு பவுண்டரியுடன் 51 ரன்களை அதிகபட்சமாக எடுத்தார். ஜோ ரூட் 42 ரன்களை எடுத்தார். மொத்தமே, 185 ரன்களில் இங்கிலாந்து 8 பவுண்டரிகளையே அடிக்க முடிந்தது.

அஜந்தா மெண்டிஸ் 33 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். தம்மிக பிரசாத் 2 விக்கெட்டுகளையும், ஹெராத், மேத்யூஸ் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.

ஆட்ட நாயகனாக ஜெயவர்தனே தேர்வு செய்யப்பட்டார். 7 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் இலங்கை 2-0 என்று முன்னிலை பெற்றுள்ளது. மொயின் அலி போல் அனைவரும் விளையாடவில்லை எனில் இங்கிலாந்து 7-0 என்று தோல்வியடையவே வாய்ப்பிருப்பதாக தெரிகிறது.

இன்றைய தோல்வியை அடுத்து முன்னாள் இங்கிலாந்து வீரர் கெவின் பீட்டர்சன் ட்விட்டரில் “டியர் அலிஸ்டர், இந்த சீசனில் இங்கிலாந்தின் வாய்ப்புகள் குறித்து நீங்கள் அக்கறை கொண்டிருந்தால், முதலில் கேப்டன் பொறுப்பை ராஜினாமா செய்து விட்டு டெஸ்ட் போட்டிகளில் கவனம் செலுத்துங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x