

நர்சிங் யாதவ் ஊக்கமருந்து விவகாரத்தின் பின்னணியில் சதி இருப்பதாக இந்திய மல்யுத்த கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்ததோடு, அவருக்கு முழு உதவி செய்யவிருப்பதாக உறுதி அளித்துள்ளது.
ஊக்கமருந்து விவகாரத்தினால் ரியோ ஒலிம்பிக் போட்டிகளில் 74 கிலோ உடல் எடைப்பிரிவின் கீழ் நர்சிங் யாதவ் போட்டியிடுவது சந்தேகமாகியுள்ளது.
இந்நிலையில் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் ஷரண் சிங் கூறியதாவது:
நர்சிங் மீது எந்தத் தவறும் இல்லை என்று கூட்டமைப்பு அவர் மீது முழு நம்பிக்கை கொண்டுள்ளது. அவருக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது, அவருக்கு நீதி கிடைப்பதை நாங்கள் உறுதி செய்வோம். பிரச்சினையிலிருந்து அவர் வெளிவந்து ஒலிம்பிக்கில் விளையாடுவதற்கு என்னால் ஆன முழு முயற்சியையும் மேற்கொள்வேன்.
நர்சிங் மட்டுமல்ல மல்யுத்த வீரர்களை காப்பது எங்களது கடமை. ஊக்கமருந்து விவகாரத்தில் அவரது ரெக்கார்ட் கிளீனாக உள்ளது. மருத்துவச் சோதனைகளை அவர் மனமுவந்து ஏற்றுக் கொண்டிருக்கிறார் என்பதுதான் உண்மை. அவர் அதனை தவிர்க்க விரும்புபவர் அல்ல.
தன்னை சுற்றி சதிவலை பின்னப்பட்டுள்ளதாக அவர் எங்களுக்கு எழுத்து மூலம் புகார் அளித்துள்ளார், அவருக்கும் தடை செய்யப்பட்ட ஊக்கமருந்துக்கும் எந்த வித தொடர்பும் இல்லை என்பதை நான் அறிவேன்.
வரும் புதனன்று தேசிய ஊக்கமருந்து தடுப்பு அமைப்பு குழு நர்சிங் யாதவை விசாரிக்கிறது. அவர்கள் இந்த விவகாரத்தின் அனைத்து அம்சங்களையும் பரிசீலித்து வியாழக்கிழமையன்று இறுதி முடிவு கூறுவார்கள். எப்படியும் நர்சிங் இதிலிருந்து சுத்தமானவராக வெளிவருவார் என்ற நம்பிக்கை உள்ளது.
இவ்வாறு கூறினார் பூஷன் ஷரண் சிங்.