

ரியோ ஒலிம்பிக் நீச்சல் போட்டியில் அமெரிக்க வீரர் மைக்கேல் பெல்ப்ஸ் மேலும் இரு தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்.
200 மீ. பட்டர்பிளை மற்றும் 4*200மீ ப்ரீஸ்டைல் நீச்சல் போட்டிகளில் அமெரிக்கா குழு அடுத்தடுத்து தங்கம் வென்றது. இதனையடுத்து நீச்சல் வீரர் பெல்ப்ஸ் ஒலிம்பிக் போட்டிகளில் வென்ற தங்கப் பதக்க எண்ணிக்கை 21 ஆனது.
பெல்பஸ் 200 மீ. பட்டர்பிளை பிரிவில் ஜப்பானின் மசாதோ சகாயை வீழ்த்தினார். பின்னர் ஒரு மணி நேரம் கழித்து நடந்த 4*200 மீட்டர் ரிலே பிரிவில் அமெரிக்க குழுவுக்கு நேர்த்தியாக தலைமை தாங்கி வெற்றி பெறச் செய்தார்.
முன்னதாக நேற்று 20-வது பதக்கத்தை வென்றதன் மூலம் மைக்கேல் பெல்ப்ஸ் சாட் லே கிளாஸின் சாதனையை முறியடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
2012 லண்டன் ஒலிம்பிக்குக்குப் பிறகு ஓய்வு பெறுவதாக அறிவித்த பெல்ப்ஸ் 2014-ம் ஆண்டு ஓய்வு முடிவை திரும்பப் பெற்று மீண்டும் சர்வதேச நீச்சல் போட்டியில் களமிறங்கினார்.
ஆனால் குடிபோதையில் வாகனம் ஓட்டியதாகக் கைது செய்யப்பட்ட பெல்ப்ஸுக்கு 6 மாதம் நீச்சல் போட்டியில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது. தடை காலத்தை நிறைவு செய்த பிறகு மீண்டும் உச்சக் கட்ட பார்முக்கு திரும்பினார்.
இந்நிலையில் ரியோ ஒலிம்பிக்கில் தற்போது தங்க வேட்டையில் ஈடுபட்டுள்ளார்.