Last Updated : 03 Feb, 2017 06:10 PM

 

Published : 03 Feb 2017 06:10 PM
Last Updated : 03 Feb 2017 06:10 PM

ஐசிசி வருவாய் பகிர்வின் படி பிசிசிஐக்கு 500மில். டாலர்கள், எங்களுக்கு 98மில். டாலர்களா? - பாக். வாரியம் கேள்வி

ஐசிசியில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய ‘பிக்-3’ ஆளுகையை பாகிஸ்தான் கடுமையாக எதிர்த்துள்ளது. இதனை முடிவுக்குக் கொண்டுவர பாடுபடப்போவதாக பாக்.கிரிக்கெட் வாரிய தலைவர் ஷஹார்யார் கான் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:

3 பெரிய கிரிக்கெட் நாடுகளின் ஆளுகையை எதிர்க்க விரும்புகிறோம், இதனால் பாரபட்சமான வருவாய்ப் பகிர்வு முறைக்கு முடிவுகட்டப்படும், இதனை ஐசிசி செய்வதற்கு எந்தவித சட்டசிக்கல்களும் இல்லை.

3 பெரிய கிரிக்கெட் வாரியங்களின் நிர்வாகத்தை நாங்கள் அப்போது ஆதரிக்கக் காரணம் பாகிஸ்தானுடன் 2015-23 இடையே 6 இருதர்ப்பு தொடர்கள் விளையாடுவதாக பிசிசிஐ வாக்குறுதி அளித்தது, அதனடிப்படையில்தான் ஆதரவு அளித்தோம், ஆனால் பிசிசிஐ தனது வாக்குறுதியை காப்பாற்றவில்லை.

இவர்களின் நிர்வாக முறையில் பிசிசிஐ-தான் ஐசிசி வருவாயில் பெரும் பங்கைக் கொண்டு செல்கிறது. பிசிசிஐக்கு 21% வருவாய் செல்கிறது, அதற்கு அடுத்து ஆஸ்திரேலியா இங்கிலாந்து பகிர்ந்து கொள்கிறது.

எனவே இப்போதைய ஏற்பாட்டின்படி பாகிஸ்தானுக்கு 98 மில்லியன் டாலர்கள்தான் வருவாய் கிடைக்கிறது, பிசிசிஐ-க்கோ 500மில்லியன் டாலர்கள் கிடைக்கிறது. இதுதான் சமத்துவ அமைப்பின் அடையாளமா?

எனவே இம்முறை ஐசிசி கூட்டத்தில் எங்கள் தரப்பு நியாயங்களை முன்வைக்க முடிவெடுத்துள்ளோம். இருதரப்பு தொடர்கள் பற்றி பிசிசிஐ என்னதான் மனதில் கொண்டுள்ளது என்பதை அறிய விரும்புகிறோம்.

மேலும் 5 நாட்கள் நடைபெறும் டெஸ்ட் போட்டியையே நாங்கள் ஆதரிக்கிறோம், 4 நாட்கள் டெஸ்ட் போட்டி வேண்டாம். டெஸ்ட் போட்டிகளில் மாற்றங்களை நாங்கள் விரும்பவில்லை.

இவ்வாறு கூறினார் ஷஹாரியார் கான்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x