Published : 24 Jan 2017 03:17 PM
Last Updated : 24 Jan 2017 03:17 PM

கருண் நாயர் முச்சதம் அடித்தது போல் இந்தியாவுக்கு எதிராக வார்னர் விளாச வேண்டும்: ஸ்மித் விருப்பம்

இந்தியாவை இந்திய மண்ணில் வீழ்த்த வேண்டுமெனில் பெரிய ஸ்கோர் தேவை, அதற்கு வார்னர், கருண் நாயர் போல் முச்சதம் விளாச வேண்டும் என்று ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித் விருப்பம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஈ.எஸ்.பி.என். கிரிக் இன்ஃபோ இணையதளத்திற்கு ஸ்மித் அளித்த பேட்டியில் கூறியதாவது:

இந்திய தொடரில் நமது மூத்த வீரர்கள் தங்கள் ஆட்டத்தை இன்னும் மேம்படுத்த வேண்டும். இதைத்தான் நாம் இலங்கையில் சரிவர செய்யவில்லை. அதனால் நாங்கள் விரும்பிய முடிவுகள் கிட்டவில்லை.

எனவே எங்கள் விருப்பத்திற்கேற்ப இந்தியாவுக்கு எதிராக முடிவு அமைய வேண்டுமெனில் வார்னர் வித்தியாசமாக ஆட வேண்டும். இயல்பாகவே அடித்து ஆடுபவர்களை நான் கட்டுப்படுத்துவதில்லை. வார்னர் அத்தகைய வீரர். இவர் சதம் எடுத்தால் அங்கிருந்து 200, 300 என்று செல்லவேண்டும், அதாவது இங்கிலாந்துக்கு எதிராக கருண் நாயர் அடித்தது போல்.

இத்தகைய பெரிய ஸ்கோர்கள்தான் அணியை நிமிரச்செய்யும். எனவே நாங்கள் மிகுந்த ஆவலுடன் இந்தத் தொடரில் பெரிய ஸ்கோர்களை நோக்கிச் செல்லப் போகிறோம், பின்வாங்கப்போவதில்லை.

நம் தடுப்பாட்டம் நன்றாக அமைந்து அதில் நம்பிக்கை வைத்து நீண்ட இன்னிங்ஸை ஆடுவதை உறுதி செய்ய வேண்டும். அணியில் அனைவரிடமும் ஷாட்கள் ஆடும் திறமை உள்ளது. ஆனால் சிறிது நேரம் களத்தில் செலவிட்டால் விஷயம் எளிதாகும், பிறகு பெரிய இன்னிங்ஸ் ஆடும் விருப்புறுதியை நிலைநாட்ட வேண்டும்.

வெற்றி என்பதே முதல் குறிக்கோளாக இருக்க வேண்டும், இருப்பினும் தோல்வியை விட டிரா நல்ல முடிவுதான். ஆட்டம் நமக்கு முடிந்து விட்டது, புதைந்து விட்டது, நம்மால் வெற்றி பெற முடியாது என்றால் நாம் நம் இயல்பூக்கமான ஆட்டத்தை தள்ளி வைத்து நின்று நிலைத்து ஆட்டம் டிரா ஆவதற்காக பாடுபட வேண்டும்.

இந்த முயற்சியைத்தான் கடந்த தொடர்களில் நாங்கள் செய்யவில்லை. 500 ரன்கள் வெற்றி இலக்கு என்று வரும்போது வீரர்கள் சென்று ஷாட்களையே ஆடினர், அடிலெய்டில் சில ஆண்டுகளுக்கு முன்பு டுபிளெசிஸ் செய்ததை நாங்கள் செய்யவில்லை. எனவே தடுப்பாட்டம் ஆடி நாம் தோல்வியைத் தவிர்க்க வேண்டும்.

ஸ்பின்னர் ஓ’கீஃபுக்கு இந்தத் தொடர் மிகவும் முக்கியமானது. பவுலிங் ஆலோசகர் ஸ்ரீதரன் ஸ்ரீராமுடன் அவர் கலந்தாலோசித்துள்ளார். இவருடன் செய்த ஆலோசனை பலனளிக்குமாயின், பந்தின் தையலை எப்படி பிடிக்க வேண்டும், தோள்பட்டை இருக்க வேண்டிய பல்வேறு கோணங்கள், வேகம் ஆகியவை பற்றி ஸ்ரீராம் பயிற்சியை ஓ கீஃப் புரிந்து கொண்டால் இந்தத் தொடரில் வெற்றி பெற்றால் அதில் ஓ’கீஃபின் பங்கு முக்கியமானதாக இருக்கும்.

இவ்வாறு கூறினார் ஸ்மித்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x