

கேப்டன்சியை உதறியதால் தோனி சிறப்பாக ஆட வேண்டிய அழுத்தம் ஏற்பட்டுள்ளது, இதனை அவர் சிறப்பான முறையில் செய்தாரென்றால் அணிக்கு அவர் மதிப்புமிக்க வீரராகத் திகழ்வார் என்று ராகுல் திராவிட் கூறியுள்ளார்.
“சந்தேகமேயில்லை, எம்.எஸ்.தோனியின் அனுபவமும் திறமையும் அவர் சிறப்பாக ஆடும் பட்சத்தில் அணியில் அவர் ஒரு மதிப்புமிக்க விரராகத் திகழ்வார். அழுத்தமான தருணத்திலும் அவரது கிரிக்கெட் அறிவு, திறமை நிச்சயம் நமக்கு கிடைக்காது.
ஆனால் அவர் தனது திறமையை தொடர்ந்து நிரூபிப்பதன் மூலம் அணியில் தன் இடத்தைத் தக்க வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே அவர் சிறப்பாக ஆடி உண்மையில் அணிக்காக சிறந்த பங்களிப்பு செய்தால் அவரை விட மதிப்புமிக்க வீரர் அணிக்கு கிடைக்காது என்றே கூற வேண்டும். குறிப்பாக பெரிய தொடர்கள் வரும் நிலையில் தோனியின் ஆட்டம் பெரும் பங்கு வகிக்கும்.
இப்போது அவரது ஆட்டத்திறன் அடிப்படையில் மட்டுமே அணியில் அவரது இடம் தீர்மானமாகும் என்பதில் ஐயமில்லை. விக்கெட் கீப்பிங், பேட்டிங் இரண்டிலும் அவர் தொடர்ந்து சிறப்பாக செயல்பட வேண்டியுள்ளது. விராட் கோலிக்கும் தோனியின் கிரிக்கெட் அனுபவமும் அறிவும் கைகொடுக்கும்.
தோனியின் முடிவு ஆச்சரியமளிக்கக் கூடியதல்ல, இப்போதில்லையென்றாலும் விரைவில் அவர் இந்த முடிவை எடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டதுதான். சாம்பியன்ஸ் டிராபி தொடர் வரை அவர் நீடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், அடுத்த உலகக்கோப்பை வரை அவர் விளையாட நினைத்திருக்க மாட்டார் என்றே நான் அவரது பார்வையிலிருந்து கருதுகிறேன். 2019-வரை தான் கேப்டனாக இருக்க வாய்ப்பில்லை என்று அவர் கருதியிருக்கும் பட்சத்தில் அவரது கேப்டன்சி விலகல் முடிவு சரியான தருணத்தில் எடுக்கப்பட்டதே. அடுத்த உலகக்கோப்பைக்கு விராட் கோலி ஒரு திறமையான ஒருநாள் அணியை கட்டமைக்க போதிய அவகாசம் அளிக்க வேண்டும் என்று தோனி நினைத்திருக்கலாம்.
ஒருநாள் அணியில் சில இளம் வீரர்கள் வருவார்கள். அவர்களுக்கு ஒரு நல்ல நிலையில் களமிறங்க வாய்ப்பளிப்பது தோனி எந்த நிலையில் களமிறங்குவார் என்பதை விட முக்கியமானது. ஏனெனில் தோனி சிறப்பாக ஆடும் பட்சத்தில் எந்த நிலையிலும் களமிறங்கி விளையாடும் திறமை படைத்தவர்.
தோனியின் கேப்டன்சியைப் பொறுத்தவரை, பொதுவாக இந்திய கிரிக்கெட்டைப் பொறுத்தவரை உணர்ச்சிகள் பொங்கும், அடங்கும் ஆனால் தோனி எப்போதும் நிதானமாகவும் அமைதியாகவும் தன்னை நடத்திக் கொண்டார், அணியையும் நடத்திக்காட்டினார். இதுதான் அவரது மிகப்பெரிய தனித்துவம். இவரது இந்தக் குணத்தினால் இந்திய கிரிக்கெட் பெரிய அளவில் பயனடைந்துள்ளது.
அவர் சாதிக்காதது என்ன? இந்தியாவுக்காக அதிக டெஸ்ட் வெற்றிகள், டெஸ்ட் தரவரிசையில் நம்பர் 1 நிலை, டி20 உலகக்கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி, உலகக்கோப்பை, ஒருநாள் கேப்டனாக அதிக வெற்றிகள், நான் புள்ளிவிவர நிபுணன் அல்ல ஆனால் புள்ளிவிவரங்கள் அனைத்திலும் அவர் முதன்மை வகிப்பார் என்று கருதுகிறேன். இந்தியாவின் வெற்றிகரமான கேப்டன் என்று தோனியை வரலாறு நினைவில் வைத்துக் கொள்ளும். இந்திய கேப்டனாக அணியையும் ஆட்டத்தையும் அடுத்த மட்டத்திற்கு உயர்த்தியுள்ளார் என்றே கூற வேண்டும்”- இவ்வாறு கூறினார் திராவிட்.