

திருச்சியில் நடைபெற்ற மாநில அளவிலான சப்-ஜூனியர் மகளிர் ஹேண்ட்பால் போட்டியில் ஈரோடு மாவட்ட அணி சாம்பியன் ஆனது. தமிழ்நாடு ஹேண்ட்பால் சங்கம், திருச்சி மாவட்ட ஹேண்ட்பால் சங்கம் மற்றும் எம்.ஏ.எம். மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி ஆகியவற்றின் சார்பில் திருச்சி சிறுகனூரில் உள்ள எம்.ஏ.எம். மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இந்தப் போட்டி நடைபெற்றது. இதில் 24 மாவட்டங்களைச் சேர்ந்த அணிகள் பங்கேற்றன.
இரு நாட்கள் நடைபெற்ற இந்தப் போட்டியில் ஈரோடு மாவட்டம் முதலிடத்தையும், திருவண்ணாமலை மாவட்டம் 2-வது இடத்தையும், தஞ்சாவூர் மாவட்டம் 3-வது இடத்தையும் பிடித்தன. வெற்றி பெற்ற அணிகளுக்கு எம்.ஏ.எம். சுழற்கோப்பை மற்றும் முறையே ரூ.5 ஆயிரம், ரூ.3 ஆயிரம் மற்றும் ரூ.2 ஆயிரம் பரிசுத்தொகையும் வழங்கப்பட்டன.
சிறந்த வீராங்கனையாக திருச்சி சு.விமலாவும், சிறந்த கோல்கீப்பராக ஈரோடு அமிர்தவர்ஷினியும் தேர்வு செய்யப்பட்டனர். தெற்காசிய மற்றும் இந்திய ஹேண்ட்பால் கழகத் தலைவரும், மத்திய மண்டல காவல் துறை ஐ.ஜியுமான எம்.ராமசுப்பிரமணி வெற்றிபெற்ற அணிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.