

200-வது டெஸ்ட் போட்டிக்குப் பிறகு எதிர்கால கிரிக்கெட் வாழ்க்கை குறித்து முடிவெடுக்குமாறு சச்சினிடம் தேர்வுக் குழு தலைவர் சந்தீப் பாட்டீல் நிர்பந்தித்ததாக வெளியான தகவலை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) மறுத்துள்ளது.
இது தொடர்பாக பிசிசிஐயின் மூத்த நிர்வாகியான ராஜீவ் சுக்லா கூறுகையில், “சச்சின் ஓய்வுபெற நிர்பந்திக்கப்பட்டதாக வெளியான செய்தி உண்மையானதல்ல. சந்தீப் பாட்டீல், சச்சின் ஆகிய இருவரிடமும் நான் பேசினேன். செய்தியில் கூறப்பட்டுள்ளது போன்ற எந்த உரையாடலும் அவர்களுக்கு இடையே நடைபெறவில்லை” என்றார். முன்னதாக, சந்தீப் பாட்டிலும் மேற்கண்ட தகவலை மறுத்துள்ளார்.
தற்போது வரை 198 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின், நவம்பரில் நடைபெறவுள்ள மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும்போது, 200 சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய முதல் வீரர் என்ற பெருமையைப் பெறுவார்.