Last Updated : 17 May, 2017 10:18 AM

 

Published : 17 May 2017 10:18 AM
Last Updated : 17 May 2017 10:18 AM

மகளிர் ஹாக்கியில் மீண்டும் இந்திய அணிக்கு ஏமாற்றம்: 2-8 என்ற கோல் கணக்கில் நியூஸி.யிடம் தோல்வி

இந்திய மகளிர் ஹாக்கி அணி நியூஸிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதன் முதல் ஆட்டத்தில் இந்திய அணி 1-4 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்திருந்தது.

இந்நிலையில் நேற்று 2-வது ஆட்டத்தில் இரு அணிகளும் புகேகோஹே நகரில் மீண்டும் மோதின. இதில் நியூஸிலாந்து அணி 8-2 என்ற கோல் கணக்கில் இந்திய அணியை வீழ்த்தியது.

அந்த அணியின் வீராங்கனையான ஸ்டேசி மைக்கேல்சன் 21, 30 மற்றும் 42-வது நிமிடங்களில் ஹாட்ரிக் கோலும், சமந்தா ஹாரிசன் 3 மற்றும் 56-வது நிமிடங்களில் இரு கோல்களும், கிர்ஸ்டென் பியர்ஸ் (52), மேடிசன் தோர் (56), ஸ்டெபானி டிக்கின்ஸ் (60) ஆகிய நிமிடங்களில் தலா ஒரு கோலும் அடித்தனர். இந்திய அணி தரப்பில் 40-வது நிமிடத்தில் லிமா மின்ஸ், 49-வது நிமிடத்தில் அனுபா பர்லா ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர்.

நியூஸிலாந்து 3-வது நிமிடத்திலேயே முதல் கோலை அடித்து 1-0 முன்னிலை பெற்றது. பீல்டு கோலான இதை அந்த அணியின் வீராங்கனையான சமந்தா ஹாரிசன் அடித்தார். இந்திய அணியின் பலவீனமான தடுப்பு அரண்களை சரியாக பயன்படுத்திக் கொண்ட சமந்தா, கோல்கம்பத்தின் அருகே வைத்து இந்த கோலை அடித்தார்.

6-வது நிமிடத்தில் இந்திய அணிக்கு பதிலடி கொடுக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் இதனை ஸ்டிரைக்கர் ராணி சரியாக பயன்படுத்திக்கொள்ளவில்லை. இதன் பின்னர் நியூஸிலாந்தின் அணியின் கோல் அடிக்கும் சில முயற்சிகளை இந்திய அணியின் கோல்கீப்பர் சவீதா தடுத்தார்.

அதேவேளையில் 12-வது நிமிடத்தில் இந்தியாவின் அனுபா பர்லா இலக்கை நோக்கி துல்லியமாக அடித்த பந்தை நியூஸிலாந்து கோல்கீப்பர் கிரேஸ் ஓ'ஹான்லான் அற்புதமாக தடுத்து நிறுத்தினார். இதன் பின்னர் நியூஸிலாந்து வீராங்கனைகள் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்தனர்.

பந்தை தங்களது கட்டுப்பாட்டி லேயே வைத்திருந்தனர். 21-வது நிமிடத்தில் ஸ்டேசி மைக்கேல்சன் பிரமாதமாக பீல்டு கோல் அடித்தார். 24-வது நிமிடத்தில் இந்திய அணிக்கு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் இதனை கோல் விழ விடாமல் நியூஸிலாந்து கேப்டன் சாலி ருதர்போர்டு தடுத்தார்.

தொடர்ந்து நெருக்கடி கொடுத்த நியூஸிலாந்து அணி அதிக அளவில் கோல் அடிக்கும் வாய்ப்புகளை உருவாக்கியது. ஆனால் சவீதா முடிந்த அளவுக்கு சிறப்பாக செயல்பட்டு முட்டுக்கட்டை போட்டார்.

30-வது நிமிடத்தில் மீண்டும் ஸ்டேசி மைக்கேல்சன் கோல் அடிக்க முதல் பாதியில் நியூஸிலாந்து அணி 3-0 என வலுவான முன்னிலையை பெற்றது. 2-வது பாதி ஆட்டம் தொடங்கியதும் இந்திய அணிக்கு 2 பெனால்டி கார்னர்கள் கிடைத்தன. முதல் வாய்ப்பு வீணடிக்கப்பட்ட நிலையில் 40-வது நிமிடத்தில் கிடைத்த வாய்ப்பை லிமா மின்ஸ் கோலாக மாற்றினார்.

ஆனால் அடுத்த 2-வது நிமிடத்தில் நியூஸிலாந்து 4-வது கோலை அடித்தது. இந்த கோலை ஸ்டேசி மைக்கேல்சன் அடித்தார். அவருக்கு இது ஹாட்ரிக் கோலாக அமைந்தது. 49-வது நிமிடத்தில் இந்திய அணியின் 2-வது கோலை அனுபா பர்லா அடித்தார்.

இதனால் கோல் வித்தியாசத்தை 4-2 என சற்று குறைக்க முடிந்தது. ஆட்டத்தின் இறுதிப் பகுதியில் இந்திய அணியின் தடுப்பு அரண் மேலும் பலவீனம் அடைந்தது. இதை பயன்படுத்தி கடைசி 8 நிமிடங்களில் நியூஸிலாந்து 4 கோல்களை அடித்தது. இந்த கோல்களை கிர்ஸ்டென் பியர்ஸ், மேடிசன் தோர், சமந்தா ஹாரிசன், ஸ்டெபானி டிக்கின்ஸ் ஆகியோர் அடித்தனர்.

இந்த தோல்வியால் 5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 0-2 என பின்தங்கி உள்ளது. 3-வது போட்டி இன்று நடைபெறுகிறது. இந்த ஆட்டத்தில் நியூஸிலாந்து அணி வெற்றி பெற்றால் தொடரை கைப்பற்றி விடும். இதனால் இந்திய அணி வீராங்கனைகள் நெருக்கடிக்கு ஆளாகி உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x