Last Updated : 05 Jan, 2016 05:17 PM

 

Published : 05 Jan 2016 05:17 PM
Last Updated : 05 Jan 2016 05:17 PM

201 ரன்கள் எடுத்து ஆம்லா அவுட்: தென் ஆப்பிரிக்கா பாலோ ஆன் தவிர்ப்பு

கேப்டவுனில் நடைபெறும் 2-வது டெஸ்ட் போட்டியின் 4-ம் நாள் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க கேப்டன் ஹஷிம் ஆம்லா 201 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். தென் ஆப்பிரிக்க அணி 5 விக்கெட் இழப்புக்கு 439 ரன்கள் எடுத்துள்ளது.

டுபிளெஸ்ஸிஸ், ஆம்லா இணைந்து 4-வது விக்கெட்டுக்காக 171 ரன்களைச் சேர்த்தனர்.

பென் ஸ்டோக்ஸ் அன்று அதிவேக இரட்டைச்சத உலகசாதனையை 10 பந்துகள் இடைவெளியில் தவறவிட்ட அதிரடி இன்னிங்ஸுக்கு நேர்மாறாக ஹஷிம் ஆம்லாவின் இந்த இன்னிங்ஸ் 2000-த்துக்குப் பிறகு அதிமெதுவான இரட்டை சதமாகும். இவர் 467 பந்துகளை சந்தித்து 27 பவுண்டரிகளுடன் இரட்டைச் சதம் எடுத்துள்ளார்.

உணவு இடைவேளைக்குப் பிறகு ஸ்டூவர்ட் பிராட் வைடு ஆஃப் த கிரீசிலிருந்து வீசிய பந்து மட்டையின் உள்விளிம்பில் பட்டு லெக்ஸ்டம்பைத் தாக்கியது ஆம்லா 201 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இவர் ஆட்டமிழந்த சிறிது நேரத்துக்கெல்லாம் ஜேம்ஸ் ஆண்டர்சன் பந்தை எட்ஜ் செய்து பென் ஸ்டோக்ஸிடம் 3-வது ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்து வெளியேறினார் டுபிளெஸ்ஸிஸ்.

தற்போது பவுமா, டி காக் ஆடி வருகின்றனர்.

நேற்று 157 நாட் அவுட்டாக இருந்த ஹஷிம் ஆம்லா, 4-ம் நாளான இன்று மொயீன் அலி பந்தை மிட் ஆனில் தட்டி விட்டு ஒரு ரன்னை எடுத்து இரட்டைச்சதம் கண்டார். இது ஆம்லாவின் 4-வது இரட்டைச் சதமாகும்.

முன்னதாக ஆம்லா, டிவில்லியர்ஸ் (88) ஜோடி நேற்று 3-வது விக்கெட்டுக்காக 183 ரன்களைச் சேர்த்தது இங்கிலாந்தின் 'கேட்ச்விடு' கைங்கரியத்தினால் நிகழ்ந்ததே.

இந்தியா தொடரிலிருந்தே ரன் குவிக்கக் கிடைக்க வாய்ப்பு தேடி வரும் ஆம்லா, டிவில்லியர்ஸ் போன்ற பெரிய வீரர்களுக்கு இருமுறை கேட்ச் வாய்ப்பைக் கோட்டை விட்டால் என்ன ஆகும், அதுதான் இங்கிலாந்துக்கு இப்போது நடந்து கொண்டிருக்கிறது. இதில் மிகவும் மோசமாக விட்ட கேட்ச் எதுவெனில், ஆம்லா 120 ரன்களில் இருந்த போது ஸ்டீவ் ஃபின் பந்தை பேக்வர்ட் பாயிண்டில் கட் செய்தார் கைக்கு வந்ததை கோட்டை விட்டார் காம்ப்டன்.

டிவில்லியர்ஸ் 5 ரன்களில் இருந்த போது, ஆண்டர்சன் பந்தில் ஜோ ரூட் ஸ்லிப்பில் ஒரு கேட்சை விட்டார். இதற்கு பதிலடியாக ஆம்லா 76 ரன்களில் இருந்த போது ஜோ ரூட் பந்தில் ஆண்டர்சன் கேட்சை விட்டார்.

பிற்பாடு நேற்று ஃபா டுபிளெஸ்ஸிஸ் மட்டையின் முன் விளிம்பில் பட்டு வந்த கேட்சை மிட்-ஆஃபில் ஃபின் தாமதமாக வினையாற்றியதால் தவறவிட்டார். மேலும் 17-ல் டுபிளெஸ்ஸிஸ் இருந்த போது மொயீன் அலி பந்து மட்டையின் உள்விளிம்பில் பட்டு ஷார்ட் லெக்கில் ஜேம்ஸ் டெய்லருக்கு கேட்ச் வாய்ப்பாக அமைந்தது, அவர் அதைப் பிடித்திருக்க வேண்டும், ஆனால் அவரது ரிப்ளெக்ஸ் தோதாக அமையவில்லை.

இங்கிலாந்து கேட்ச்களை பிடித்திருந்தால் தற்போது தென் ஆப்பிரிக்கா அனைத்து விக்கெட்டுகளையும் கூட இழந்திருக்கலாம். கேட்சஸ் வின் மேட்சஸ் என்று கூறுவார்கள். பெரிய அணிகளுக்கு எதிராக பீல்டிங்கைத் தெளிவாக செய்யாத அணிகள் வெல்வது கடினம். முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா இந்தியத் தோல்வியிலிருந்து மீளாத மனநிலையில் இருந்தது. ஆனால் தற்போது இங்கிலாந்து பந்துவீச்சுக்கு சவாலாகத் திகழ்ந்துள்ளது.

மைக்கேல் கிளார்க் போன்ற அதிரடி பாசிட்டிவ் கேப்டனாக இருந்தால், ஃபாலோ ஆன் தவிர்ப்பு ஸ்கோரை எட்டியவுடன் தென் ஆப்பிரிக்கா இன்னிங்ஸை டிக்ளேர் செய்து இங்கிலாந்தை 100-125 ரன்களுக்கு சுருட்ட முடியுமா என்று ஒரு ஆர்வத்தை ஏற்படுத்தியிருப்பார்.

ஹஷிம் ஆம்லாவிடம் நாம் அதையெல்லாம் எதிர்பார்க்க முடியாது. தென் ஆப்பிரிக்காவின் மீட்சியில் இங்கிலாந்தின் கவனக்குறைவும் பங்கு செலுத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x