

மும்பையில் இங்கிலாந்து லெவன் அணிக்கு எதிரான பயிற்சி ஒருநாள் போட்டியில் முதலில் பேட் செய்த தோனி தலைமை இந்தியா ஏ அணி 50 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 304 ரன்கள் எடுத்தது.
ஷிகர் தவண் தொடக்கத்தில் மந்தமாகவும் பிறகு அடித்து ஆடியும் 84 பந்துகளில் 8 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 63 ரன்கள் எடுத்து வெளியேறினார். முன்னதாக மந்தீப் சிங் 24 பந்துகளில் ஒரே பவுண்டரியுடன் 8 ரன்கள் எடுத்து வில்லே இன்கட்டரில் பவுல்டு ஆனார்.
ராயுடு, தவண் ஜோடி 2-வது விக்கெட்டுக்காக 21 ஓவர்களில் 111 ரன்களைச் சேர்த்தனர். அப்போதுதான் தவண் ஆட்டமிழந்தார். இந்த ஜோடியில் தவண் சற்றே நிதானம் காண்பிக்க ராயுடு சிறப்பாக ஆடினார். டாஸனின் அடுத்தடுத்த ஓவர்களில் 4 பவுண்டரிகளை விளாசிய அம்பாத்தி ராயுடு, ஒரு ஷாட்டை மேலேறி வந்து கவர் திசையில் தூக்கி அடித்து அரைசதம் கண்டார். அதனைக் கொண்டாடும் விதமாக மோசமான லெக் திசை பந்தை ஸ்வீப் ஷாட்டில் பவுண்டரி அடித்தார்.
தவண் ஆட்டமிழந்தவுடன், யுவராஜ் களமிறங்கி கவலைப்படாமல் தனது அனாயாச ஆட்டத்தை தொடங்கினார். ரஷீத் ஓவரில் கூக்ளியை மேலேறி வந்து லாங் ஆஃபில் மிக அழகாக சிக்சருக்கு தூக்கினார், பிறகு அதே ஓவரில் நின்ற இடத்திலிருந்து பவுலர் தலைக்கு மேல் நேராக ஒரு சிக்ஸ் விளாசினார். ஆனாலும் பழைய யுவராஜைப் பார்க்க முடிந்தது கிறிஸ் வோக்ஸின் மிடில் அண்ட் ஆஃப் பந்தை ஆன் டிரைவில் பவுண்டரி அடித்ததே. 40 பந்துகளில் யுவராஜ் அரைசதம் கடந்தார்.
இதனையடுத்து ராயுடு 97 பந்துகளில் 11 பவுண்டரி 1 சிக்சருடன் அபார சதம் கண்டு ரிட்டையர்ட் அவுட் ஆனார். பலத்த ஆரவாரங்களுக்கு இடையே தோனி களமிறங்கினார். 25 ஓவர்களில் 110/1 என்று இருந்த இந்தியா ஏ அதன் பிறகு அதிரடி ஆட்டத்தின் காரணமாக 40-வது ஓவர் முடிவில் 219/2 என்று ஆனது. யுவராஜ் சிங் 48 பந்துகளில் 6 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 56 ரன்கள் எடுத்து புல்ஷாட் சரியாக சிக்காமல் பாலிடம் அவுட் ஆனார்.
தோனியின் கடைசி ஓவர் விளாசல்...
தோனி, வில்லேயை இரண்டு பவுண்டரிகளுடன் தொடங்கினார். சஞ்சு சாம்ன்சன் டக் அவுட் ஆனார். 34 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 45 ரன்கள் எடுத்திருந்த தோனி, கடைசி ஓவரை வோக்ஸ் வீச வர, முதல் பந்தை ஆஃப் திசையில் நகர்ந்து கொண்டு டீப் ஸ்கொயர் லெக்கில் சிக்சர் அடித்தார். அடுத்த பந்து புல்ஷாட் தவறாக அமைய ரஷீத் பந்தை சரியாகக் கணிக்கவில்லை 2 ரன்கள். அடுத்த பந்தும் மிஸ்ஹிட் புல்ஷாட் விக்கெட் கீப்பருக்கு பின்னால் பவுண்டரி, பிறகு ஆஃப் ஸ்டம்ப் பந்து அந்தத் திசையிலேயே தூக்கி அடிக்கப்பட்டு பவுண்டரி ஆனது. கடைசியில் தன் பாணியில் மிட்விக்கெட்டில் ஒரு சிக்ஸ், என்று 23 ரன்களை கடைசி ஓவரில் விளாசினார்.
40 பந்துகளில் 8 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் தோனி 68 ரன்கள் எடுத்தார், இதில் 35-வது பந்தில் அரைசதம் கடந்தார். இந்தியா ஏ அணி 304/4. இங்கிலாந்து லெவன் தரப்பில் 9 ஓவர்களில் 48 ரன்கள் என்று இருந்த வோக்ஸ் கடைசி ஓவரில் தோனியின் விளாசலினால் 71 ரன்களில் முடிந்தார். வில்லே, பால் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். மொயின் அலி 10 ஓவர்களில் 42 ரன்களையே விட்டுக் கொடுத்தார்.