

கிரிக்கெட்டுக்கு சச்சின் என்றால், கோல்புக்கு டைகர் உட்ஸ். இந்த இருவருமே தங்களுடைய விளையாட்டில் மிகப்பெரிய சாதனைகளை படைத்திருப்பவர்கள். இவர்கள் இருவரும் டெல்லியில் செவ்வாய்க்கிழமை சந்தித்துக் கொண்டனர்.
இந்தியாவுக்கு முதல்முறையாக வந்திருக்கும் டைகர் உட்ஸ், சச்சின் மற்றும் அவருடைய குடும்பத்தினரை சந்தித்துப் பேசிய பிறகு, டுவிட்டரில் கூறியிருப்பதாவது: கிரிக்கெட் மேதை சச்சின் மிக அமைதியானவர். அவரையும், அவருடைய குடும்பத்தினரையும் சந்தித்தேன். இந்தியாவில் எனக்கு சிறப்பான வரவேற்பு கிடைத்தது. இங்கு வருவதை நான் விரும்புகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
டெல்லி கோல்ப் கிளப்பில் காட்சிப் போட்டியில் பங்கேற்பதற்காக டெல்லி வந்திருக்கும் டைகர் உட்ஸ், அங்குள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் சச்சினை சந்தித்தார். கடந்த நவம்பரில் கிரிக்கெட்டிலிருந்து விடை பெற்ற சச்சின், கோல்ப் விளையாட்டின் தீவிர ரசிகர் ஆவார்.