

ஆசிய கோப்பையில், இந்திய - இலங்கை அணிகளுக்கு இடையே இன்று பதுல்லா நகரில் நடந்த ஒருநாள் போட்டியில், இந்தியா 2 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இலங்கையின் வீரர் சங்கக்காரா சதமடித்து, வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தார். இந்தத் தோல்வியினால் இந்தியா புள்ளிப் பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டது.
264 ரன்கள் என்கிற இலக்கை விரட்டிய இலங்கை அணிக்கு திரிமன்னே மற்றும் பெரேரா இருவரும் நல்ல துவக்கத்தை தந்தனர். 17 ஓவர்களில் 80 ரன்களைக் கடந்த இந்த இணை இலங்கையின் பக்கம் வெற்றி வாய்ப்பை உருவாக்கியது.
18-வது ஓவரை வீசிய இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் அப்போது 38 ரன்கள் எடுத்திருந்த திரிமன்னேவை வீழ்த்தினார். பார்ட்னர்ஷிப் உடைந்தாலும், நட்சத்திர வீரர் சங்கக்காராவுடன் இணைந்து பெரேரா தனது ஆட்டத்தைத் தொடர்ந்தார். 62 பந்துகளில் அவர் அரை சதத்தைக் கடந்தார். மீண்டும் பந்து வீச வந்த அஸ்வின், பெரேராவை வீழ்த்தினார். இது அவரது 100-வது விக்கெட் என்பது குறிப்பிடத்தக்கது. அப்போது இலங்கை அணியின் ஸ்கோர் 2 விக்கெட் இழப்பிற்கு 134 ரன்களாக இருந்தது
திருப்புமுனை ஏற்படுத்திய ஜடேஜா
தனது 5-வது ஓவரை வீச வந்த ரவீந்த்ர ஜடேஜா, முதல் பந்திலேயே ஜெயவர்த்தனேவை ஆட்டமிழக்கச் செய்தார். அடுத்த பந்திலேயே சந்திமால் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேற, ஆட்டம் இந்தியாவுக்குச் சாதகமாகத் திரும்பியது.
அடுத்த சில ஓவர்களிலேயே மாத்யூஸ், தொடர்ந்து வந்த செனநாயகே என இருவரும் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, சங்கக்காரா ஆடினால் மட்டுமே இலங்கையால் வெற்றி பெற முடியும் என்கிற சூழல் உருவானது.
நம்பிக்கை தந்த சங்கக்காரா
சூழலைப் புரிந்து கொண்டு ஆடிய சங்கக்காரா பவர்ப்ளே ஓவர்களைத் தாண்டியும் ரன் சேர்ப்பில் ஈடுபட்டார். 56 பந்துகளில் அவர் அரை சதத்தைக் கடந்தார். ஆனால் 9 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஜடேஜாவின் பந்தில் ஆட்டமிழந்தார்.
எதற்கும் அசராமல் ஆடி வந்த சங்கக்காரா மோசமாக வீசப்பட்ட பந்து எதையும் தவறவிடாமல், பவுண்டரிக்கோ, சிக்ஸருக்கோ விரட்டினார். 46, 47 மற்றும் 48-வது ஓவர்களில் 32 ரன்கள் இலங்கைக்குச் சேர்ந்தது. இதனால் வெற்றிக்கு 12 பந்துகளில் 12 ரன்கள் மட்டுமே தேவை என்கிற எளிதான நிலை இலங்கைக்கு உருவானது. அபாரமாக ஆடிய சங்கக்காரா சத்தமில்லாமல், 83 பந்துகளில் சதத்தைக் கடந்தார்.
ஆனால் அடுத்த பந்திலேயே ஷமியின் பந்தில் சங்கக்காரா ஆட்டமிழக்க, மீண்டும் ஆட்டம் இந்தியாவுக்குச் சாதகமாக மாறியது. 7 பந்துகளில் 5 ரன்கள் தேவை என்கிற நிலையில் ஷமி வீசிய பந்து மெண்டிஸின் பேட் முனையில் பட்டு பவுண்டரிக்குச் செல்ல, வெற்றிக்கு 1 ரன் மட்டுமே தேவை என்று ஆனது. இறுதியாக இலங்கை 49.2 ஓவர்களில் 265 ரன்கள் என்ற வெற்றி இலக்கைத் தொட்டது.
முன்னதாக டாஸ் வென்ற இலங்கை அணி ஃபீல்டிங்கை தேர்ந்தெடுத்தது. துவக்கத்திலேயே ரோஹித் சர்மா 13 ரன்களுக்கு ஆட்டமிழந்தாலும், மற்றொரு துவக்க ஆட்டக்காரரான ஷிகர் தவான் பொறுப்பாக ஆடினார்.
தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் கோலி, ரன் சேர்ப்பை ஆரம்பித்தார். விக்கெட் இழக்காமல் 20 ஓவர்களைக் கடந்தனர். பார்ட்னர்ஷிப்பும் 100 ரன்களைக் கடந்தது. தவாண் 68 பந்துகளில் அரை சதத்தைக் கடந்தார்.
சுழலில் சிக்கிய வீரர்கள்
27-வது ஓவரை வீசிய இலங்கையின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் மெண்டிஸ், அந்த ஓவரின் 3-வது பந்திலேயே கோலியை வீழ்த்தினர். 48 ரன்கள் எடுத்திருந்த கோலி அரை சதத்தை தவறவிட்டார்.
பின்னர் களமிறங்கிய ரஹானே நிதானமாக ஆட முயற்சித்தும், 22 ரன்களில், மற்றுமொரு சுழற்பந்து வீச்சாளரான செனநாயகேவின் பந்தில் ஆட்டமிழந்தார். 94 ரன்கள் எடுத்திருந்த ஷிகர் தவாண் மெண்டிஸ் பந்தில் ஆட்டமிழக்க, அந்த ஓவரிலியே தினேஷ் கார்த்திகும் 4 ரன்களுக்கு வெளியேறினார். ஒரு கட்டத்தில் இந்தியா 300 ரன்களைக் கடக்கும் என்றிருந்த நிலை மாறி 250 ரன்களையாவது எட்ட முடியுமா என்ற இக்கட்டான நிலை வந்தது.
தொடர்ந்து வந்த ராயுடு, பின்னி இருவரும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க அணியின் ஸ்கோர் 216 ரன்களுக்கு 7 விக்கெட் என ஆனது. இறுதியில் அஸ்வின், ஜடேஜா மற்றும் ஷமி ஆகியோரின் முயற்சியால் இந்தியா 264 ரன்களை எடுத்தது.