

சென்னை கால்பந்து சங்கம் சார்பில் கல்லூரிகளுக்கு இடையிலான கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி சென்னையில் இன்று தொடங்குகிறது.
எஸ்.ஆர்.எம். பல்கலை, சத்யபாமா பல்கலை., லயோலா கல்லூரி உள்ளிட்ட 16 அணிகள் பங்கேற்கும் இந்தப் போட்டிக்கு சென்னை சிட்டி கால்பந்து கிளப்பின் தலைவர் ரோஹித் ரமேஷ் ஸ்பான்சர் செய்துள்ளார். இந்தப் போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.25 ஆயிரம் ரொக்கப் பரிசும், கோப்பையும் வழங்கப்படும். 2, 3, 4-வது இடங்களைப் பிடிக்கும் அணிகளுக்கு முறையே ரூ. 15 ஆயிரம், ரூ.10 ஆயிரம், ரூ.5 ஆயிரம் ரொக்கப் பரிசு வழங்கப்படும்.
போட்டியில் பங்கேற்கும் 16 அணிகளும் 4 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் காலிறுதி லீக் சுற்றில் விளையாட தகுதி பெறும். அதிலிருந்து 4 அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். இறுதிப் போட்டி டிசம்பர் 7-ம் தேதி நடைபெறுகிறது. தியாகராயா கல்லூரி, ஹிந்துஸ்தான் பல்கலை., மெட்ராஸ் கிறிஸ்தவக் கல்லூரி ஆகிய இடங்களில் போட்டிகள் நடைபெறுகின்றன.