

சீன ஓபன் டென்னிஸ் போட்டியில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் சாம்பியன் பட்டம் வென்றார்.
சீன தலைநகர் பெய்ஜிங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் இறுதிச்சுற்றில் ஜோகோவிச் 6-3, 6-4 என்ற நேர் செட்களில் ஸ்பெயினின் ரஃபேல் நடாலை வீழ்த்தினார்.
இதன்மூலம் கடந்த 5 ஆண்டுகளில் சீன ஓபனில் 4-வது முறையாக பட்டம் வென்றுள்ளார். முன்னதாக 2009, 2010, 2012 ஆகிய ஆண்டுகளில் இங்கு பட்டம் வென்றுள்ள ஜோகோவிச், 2011-ல் காயம் காரணமாக சீன ஓபனில் பங்கேற்கவில்லை.
நடாலை வீழ்த்தியதன் மூலம் சீன ஓபனில் தொடர்ச்சியாக 19 ஆட்டங்களில் வெற்றி கண்டுள்ளார் ஜோகோவிச். மேலும் இந்த ஆண்டில் ஹார்ட் கோர்ட்டில் நடைபெற்ற அனைத்து ஆட்டங்களிலும் வென்றிருந்த நடாலின் தொடர் வெற்றிக்கும் ஜோகோவிச் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
கடந்த அமெரிக்க ஓபன் இறுதிச்சுற்றில் ஜோகோவிச்சை வீழ்த்திய நடாலால், சீன ஓபனின் இறுதி ஆட்டத்தில் ஜோகோவிச்சின் ஒரு சர்வீஸைக்கூட முறியடிக்க முடியவில்லை.
இந்தப் போட்டியில் ஜோகோவிச் வெற்றி கண்டபோதும், தரவரிசையில் முதலிடத்தை நடாலிடம் இழப்ப திலிருந்து தப்பிக்க முடியவில்லை. திங்கள்கிழமை ஏடிபி தரவரிசை வெளியாகும்போது, ஜோகோவிச் முதலிடத்தை நடாலிடம் இழப்பார்.