

ஏர்செல் சென்னை ஓபன் டென்னிஸ் போட்டிக்கான சீசன் டிக்கெட் (7 நாள் போட்டிகளையும் காணக்கூடியது) விற்பனை வரும் திங்கள்கிழமை (டிசம்பர் 9) தொடங்குகிறது.
19-வது சென்னை ஓபன் டென்னிஸ் போட்டி வரும் 30-ம் தேதி முதல் ஜனவரி 5-ம் தேதி வரை சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய டென்னிஸ் மைதானத்தில் நடை பெறுகிறது.
உலகின் முன்னணி வீரர்களான ஸ்டானிஸ்லஸ் வாவ்ரிங்கா, தாமஸ் பெர்டிச் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் பங்கேற்கவுள்ள இந்தப் போட்டிக்கான ஆன்லைன் சீசன் டிக்கெட் விற்பனை வரும் திங்கள்கிழமை காலை 8 மணிக்குத் தொடங்குகிறது. www.bookmyshow.com என்ற இணையதளத்தின் வாயிலாக டிக்கெட்டை பெறலாம்.
சீசன் டிக்கெட்டின் விலை ரூ. 1500, ரூ. 3000, ரூ. 5000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கார்ப்பரேட் நிறுவனங்களும், மொத்தமாக டிக்கெட் வாங்க விரும்புபவர்களும் இணையதளத்தின் மூலம் டிக்கெட்டை பெறமுடியும். இது தொடர்பான மேலும் விவரங்களை www.aircelchennaiopen.org என்ற இணையதளத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
சீசன் டிக்கெட்டுகள் மைதானத்தில் உள்ள கவுன்ட்டர்களில் வரும் 20-ம் தேதி விற்பனை செய்யப்படவுள்ளன. தினசரி போட்டிக்கான டிக்கெட்டுகள் போட்டி நடைபெறும்போது மைதானத்தில் உள்ள கவுன்ட்டர்களிலும், இணையதளத்தின் மூலமாகவும் விற்பனை செய்யப்படும் என போட்டி ஏற்பாட்டுக் குழு தெரிவித்துள்ளது.