

உலகின் தலைசிறந்த ஒலிம்பிக் நீச்சல் வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ள அமெரிக்க வீரர் மைக்கேல் பெல்ப்ஸ் சாதாரண குடும்பத்தில் பிறந்தவர். தந்தை பிரெட் காவல்துறை அதிகாரி. தாய் டெப்பி ஆசிரியை. பெல்ப்சின் மூத்த சகோதரி விட்னியும் நீச்சல் வீராங்கனை. பெல்ப்ஸுக்கு 7 வயதாக இருந்தபோதே அவரது பெற்றோர் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர்.
பயிற்சியாளர் பாப் பவ்மென், 11 வயதில் மைக்கேல் பெல்ப்ஸ்-ஐ பார்த்தார். அந்த கணமே பவ்மெனின் மனதில், பெல்ப்ஸ் உலக சாம்பியனாக நிச்சயம் வருவார் எனத் தோன்றியது.
இதையடுத்து அவரது பெற்றோரிடம் பேசிய பவ்மென், பெல்ப்ஸ் மனது வைத்தால் உலகின் தலைசிறந்த நீச்சல் வீரனாக முன்னேற முடியும் என தன் மனதில் தோன்றியதை கூறினார். அவர் அன்று சொன்ன வார்த்தை பொய்த்து போகவில்லை.
ஒலிம்பிக்கின் தங்க வேட்டை நாயகனாக உருவெடுத்துள்ள மைக்கேல் பெல்ப்ஸ். 18 தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
சோவியத் யூனியனை சேர்ந்த ஜிம்னாஸ்டிக் வீராங்கனை லரிசா லத்யானியா (1956-1964), பின்லாந்து தடகள வீரர் பாவோ நுர்மி (1920-1928), அமெரிக்க நீச்சல் வீரர் மார்க் பிட்ஸ் (1968-1972), அமெரிக்க தடகள வீரர் கார்ல் லீவிஸ் (1984-1996) ஆகியோர் தலா 9 தங்கப்பதக்கம் வென்றதே தனிப்பட்ட வீரரின் அதிகபட்ச தங்கமாக இருந்தது. இதை பெல்ப்ஸ் பெய்ஜிங் ஒலிம்பிக்கில் முறியடித்தார்.
பெல்ப்ஸ் 2004-ம் ஆண்டு ஏதென்சில் நடந்த ஒலிம்பிக்கில் 6 தங்கமும், 2 வெண்கல பதக்கமும் பெற்றார். 2008-ல் பெய்ஜிங் ஒலிம்பிக்கில் 8 தங்கம் கைப்பற்றினார். 2012-ம் ஆண்டு லண்டனில் நடந்த ஒலிம்பிக்கில் 4 தங்கமும், 2 வெள்ளியும் வென்றார். 3 ஒலிம்பிக்கிலும் சேர்த்து 18 தங்கம், 2 வெள்ளி, 2 வெண்கலம் என மொத்தம் 22 பதக்கம் பெற்றுள்ளார் பெல்ப்ஸ்.
பெய்ஜிங் ஒலிம்பிக்கில் 8 தங்கம் வென்றதன் மூலம் பெல்ப்ஸ் ஒரே ஒலிம்பிக்கில் அதிக தங்கப்பதக்கம் பெற்றவர் என்ற சாதனையை படைத்திருந்தார். அதற்கு முன்பு 1972-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் அமெரிக்க நீச்சல் வீரர் மார்க் பிட்ஸ் 7 தங்கப்பதக்கங்களை வென்றதே சாதனையாக இருந்தது.
ஒலிம்பிக் போட்டியில் அதிக பதக்கம் வென்ற சாதனை வீரராகவும் பெல்ப்ஸ் இருக்கிறார். ஒன்றுபட்ட சோவியத் யூனியன் சார்பாக பங்கேற்ற ஜிம்னாஸ்டிக் வீராங்கனை லரிசா லாத்னியாதான் அதிக பதக்கம் வென்றவராக திகழ்ந்தார். இவர் 1956, 1960, 1964 ஆகிய 3 ஒலிம்பிக் போட்டிகளின் மூலம் 18 பதக்கங்களைப் பெற்றார். இதை பெல்ப்ஸ் லண்டன் ஒலிம்பிக்கில் முறியடித்து, அதிக பதக்கங்கள் (22) வென்றவர் என்ற சாதனையை படைத்தார்.
வெற்றி ரகசியம்
போட்டியிடும் மனப்பான்மை, மிக சிறப்பான உடல் தகுதி ஆகியவையே பெல்ப்ஸின் சாதனையின் ரகசியம் என்று பயிற்சியாளர் பாப் பவ்மென் கூறியுள்ளார். அகன்ற தோள்கள், மிக நீளமான கைகள் உள்ளிட்ட உடல் அம்சங்கள் நீச்சலில் அவருக்கு பேருதவி யாக இருக்கிறது. 6 அடி 4 அங்குலம் உயரமுடைய பெல்ப்ஸின் கைகள் மற்ற வர்களைக் காட்டிலும் சற்றே நீளமானது என்பதால், உயரத்துக்கு ஏற்ற அளவை விட 3 அங்குலம் கூடுதலான தூரத்தை எட்டக் கூடிய சிறப்புத் தகுதியை பெல்ப்ஸ் பெற்றுள்ளார்.
நீச்சல் போட்டிகளில் ஒரு முனையில் இருந்து மறுமுனைக்கு செல்லும் வீரர்கள் அங்கிருந்து திரும்பி வர நீருக்குள்ளேயே ஒரு குட்டிக்கரணம் அடித்து கால்களால் சுவரை உதைத்து ஒரு உந்துதலை உருவாக்கி மீண்டும் நீந்திச் செல்வர். இந்த விஷயத்திலும் பெல்ப்ஸ் சற்றே வித்தியாசமானவர்.
மற்ற நீச்சல் வீரர்களைப் போல் குட்டிக்கரணம் அடிக்கும் போது பெல்ப்ஸ் அதிக ஆழத்திற்கு செல்ல மாட்டார். நீரின் மேல்மட்டத்தில் இருப்பதால் நீரின் ஈர்ப்பு விசை மிகக் குறைவாக இருக்கும். இதன் காரணமாக மற்ற வீரர்கள் கால்களால் சுவரை உதைத்து கடக்கும் தூரத்தை விட பெல்ப்ஸ் சற்றே அதிக தூரம் செல்ல முடிகிறது. இந்த சூட்சுமத்தை பெல்ப்ஸ் நீண்ட காலமாக பயன்படுத்தி வருவதே அவரது தங்கவேட்டையின் ரகசியமாக உள்ளது.
இந்த முறை ரியோ ஒலிம்பிக்கில் பெல்ப்ஸ் 4 பிரிவுகளில் (100 மீட்டர் பட்டர்பிளை, 200 மீட்டர் பட்டர் பிளை, 200 மீட்டர் தனி நபர் மெட்லே, 4X100 மீட்டர் மெட்லே தொடர்) தங்க பதக்க வேட்டைக்காக களமிறங்குகிறார்.