ஆசிய பாட்மிண்டனில் இந்தியா தோல்வி

ஆசிய பாட்மிண்டனில் இந்தியா தோல்வி
Updated on
1 min read

ஆசிய பாட்மிண்டன் கலப்பு அணிகள் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய அணி கால் இறுதியில் 2-3 என்ற கணக்கில் தாய்லாந்திடம் தோல்வியடைந்தது.

வியட்நாமில் உள்ள ஹோ சி மின் நகரில் நடைபெற்று வரும் இந்த தொடரில் முதலில் நடைபெற்ற கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் பிரணவ் ஜெர்ரி சோப்ரா, ஷிக்கி ரெட்டி ஜோடி 25-23, 10-21,10-21 என்ற செட் கணக்கில் சாவிட்ரி அமிட்ராபாய், புவரானுக் ஜோடியிடம் தோல்வி யடைந்தது.

இதனால் தாய்லாந்து 1-0 என முன்னிலை வகித்தது. இதையடுத்து நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் முன்னணி வீரரான பிரனோய் பதிலடி கொடுத்தார். அவர் 21-18, 21-15 என்ற நேர் செட்டில் சுப்பான்யு அவிகிங்சனை வீழ்த்தினார். இதனால் போட்டி 1-1 என சமநிலை அடைந்தது.

தொடர்ந்து நடைபெற்ற ஆடவர் இரட்டையர் பிரிவில் மனு அட்ரி, சுமித் ரெட்டி ஜோடி 21-19, 21-16 என்ற செட் கணக்கில் கிட்டின் அப்பான் ஹட்ரென், நிப்பிட்போன் ஜோடியை வீழ்த்த இந்திய அணி 2-1 என முன்னிலை பெற்றது.

மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் ரிதுபர்னா தாஸை 21-11, 12-21, 15-21 என்ற செட் கணக்கில் சோசூவாங் வீழ்த்த போட்டியை 2-2 என சமநிலையை எட்ட செய்தது தாய்லாந்து அணி.

இதனால் வெற்றியை தீர்மானிப்பதாக மகளிர் இரட்டையர் பிரிவு ஆட்டம் அமைந்தது. இதில் இந்தியாவின் அஸ்வினி பொன் னப்பா, ஷிக்கி ரெட்டி ஜோடி 21-15, 17-21, 7-21 என்ற செட் கணக்கில் ஜோங்கோல்பன் கிட்டிதராகுல், ரவின்டா பிரஜோங்ஜெய் ஜோடி யிடம் தோல்வியடைந்தது. இந்த தோல்வியால் அரை இறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இந்திய அணி இழந்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in