Published : 02 Jun 2017 09:54 AM
Last Updated : 02 Jun 2017 09:54 AM

தேவைதானா ‘அனில்’ கும்ப்ளே, விராட் கோலி மோதல்

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் கலந்து கொண்டுள்ள விராட் கோலி தலைமையிலான இந்திய அணியின் ஓய்வு அறையில் அதிருப்திகள் மேலாங்கி உள்ளதாகவும் சில சீனியர் வீரர்கள் தலைமை பயிற்சியாளர் அனில் கும்ப்ளே மீது நம்பிக்கை இல்லா தன்மையை வெளிப்படுத்துவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

தலைமைப் பயிற்சியாளர் பதவியில் இருந்து அனில் கும்ப்ளேவை திடீரென மாற்றுவதற்கான நடவடிக்கைகளில் பிசிசிஐ இறங்கியது பலரையும் வியப்பில் ஆழ்த்தியது. ஓராண்டுக்கான அவரது ஒப்பந்த காலம் வரும் 18-ம் தேதியுடன் நிறைவடைகிறது.

வழக்கமாக சிறப்பாக செயல்படும் பயிற்சியாளரின் பதவி காலத்தை நீட்டிக்கும் பழக்கம் பிசிசிஐ-ல் உண்டு. ஆனால் இம்முறை கும்ப்ளேவுக்கு அந்த வாய்ப்பு கிடைப்பது அரிதுதான். இதற்கு காரணம் கேப்டன் விராட் கோலி போர்க்கொடி தூக்கியிருப்பதே என்பதுதான் சற்று அதிரவைக்கிறது.

கோலிக்கும் கும்ப்ளேவுக்கும் இடையே ஏற்பட்ட மோதலே பிசிசிஐ புதிய பயிற்சியாளரை நாடுவதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. அனில் கும்ப்ளேவின் பயிற்சி அணுகுமுறைகள் வீரர்களுக்கு மிகவும் கடினப்பாட்டை அளிக்கிறது என்றும், சுதந்திரம் அளிப்பதில்லை என்றும், கறாரான பயிற்சி அணுகுமுறைகளால் சில வீரர்கள் காயம் அடைகின்றனர் என்றும் அடுக்கடுக்கான புகார்களை விராட் கோலி தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இவற்றுக்கெல்லாம் மேலாக, மிரட்டும் தொனியில் கும்ப்ளே நடந்து கொள்வதாகவும் கொதித்துள்ளார் கோலி. இந்தச் சர்ச்சை எழுந்துள்ள நேரம் தவறான நேரமாகும். ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி சமயத்தில் இந்தப் பிரச்சினை எழுந்துள்ளது ஒட்டுமொத்த அணிக்கும் நன்மை பயப்பதாக இருக்காது.

அதிலும் ஒரு சில தினத்தில் பரமவை ரியான பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தை எதிர்நோக்கி உள்ள நிலை யில் இந்த மோதல் விவகாரம் உச்சக் கட்டத்தை அடைந்துள்ளது, எங்கே அணியின் திறனில் பாதிப்பை ஏற்படுத்தி விடுமோ என்ற அச்சம் உருவாகி உள்ளது.

சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு புறப்படும் முன்னர்தான் விராட் கோலி இதுதொடர்பாக பிசிசிஐ-யை நிர்வகிக்கும் குழுவிடம் விலாவாரியாக தெரிவித்துள்ளார். மேலும் நியூஸிலாந்து அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தின் போது கும்ப்ளே தொடர்பாக, கங்குலியிடம் ஆதங்கப்பட்டுள்ளார் கோலி.

பிசிசிஐ-யின் ஆலோசனைக் குழுவின் மும்மூர்த்திகளில் கங்குலியும் ஒருவராக இருந்து வருகிறார். சச்சின் டெண்டுல்கர், லட்சுமண் ஆகியோருடன் இணைந்து கும்ப்ளேவை பயிற்சியாளராக நியமித்ததில் குங்குலியும் முக்கிய பங்கு வகித்தார்.

அணியில் உள்ள வீரர்கள், கும்ப்ளேவின் ஆளுமை திறன் குறித்து கவலையடைந்துள்ளனர். மேலும் அவர் பள்ளி தலைமை ஆசிரியர் போன்று கடினமாக நடந்து கொள்வதாகவும் குற்றச்சாட்டை கூறி உள்ளனர். இதுதொடர்பாக கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் கூறும்போது, “ஓய்வறையில் கூட வீரர்களிடம் பயிற்சியாளர் கடினமாக நடந்து கொண்டுள்ளார். கோலியோ அல்லது தோனி போன்ற உயர்ந்த நிலையில் இல்லாத வீரர்கள் தாங்கள் மிரட்டப்படுவதாகவே உணர்கின்றனர்.

கும்ப்ளேவின் பயிற்சியில் வீரர் களுக்கு ஏற்படும் காயங்கள் கிரிக்கெட் தொடர்பானவையாக இல்லை. அவர் வீரர்களுக்கு அதிக அழுத்தம் கொடுக் கிறார். இதை வீரர் ஒருவர் வெளிப்படையாக கூறினார். எனவே அணி மகிழ்ச்சியாக இல்லை.

வீரர்களின் கவலையை கும்ப்ளே உணர்ந்து கொள்ளாதது ஆச்சர்யமாக உள்ளது. இந்திய அணி உள்நாட்டு தொடர்களில் சிறப்பாக விளையாடி வெற்றிகளை குவித்ததாலே, வெற்றிகர மான பயிற்சியாளராக கும்ப்ளே உள்ளார். இங்குள்ள கட்டமைப்பில் பயிற்சியாளராக இருப்பவர் ஒன்றும் ‘ராஜா’ இல்லை. ஒரு பயிற்சியாளராக இதை அவர் நன்கு உணர்ந்து கொள்ள வேண்டும்” என்றார்.

இங்கிலாந்து சென்றடைந்ததுமே சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான முதல் பத்திரிகையாளர் சந்திப்பில் கோலி தெரித்த கருத்துக்கள் கும்ப்ளே உடனான மோதலை வெட்ட வெளிச்சத்துக்கு கொண்டு வந்தது. “பயிற்சியாளர் நியமனத்தில் கடந்த காலங்களைப் போலவே இப்போதும் நடைமுறைகள் பின்பற்றப்படுகிறது.

நான் அறிந்த வரையில் அனைத்தும் பிசிசிஐ விதிகளின்படியே நடைபெறுகிறது. முந்தைய தேர்வுகளுடன் ஒப்பிடுகையில் எந்தவொரு வித்தியாசமான நடை முறையையும் தலைமை பயிற்சியாளர் தேர்வில் தற்போது பின்பற்றப்படுவதாக தெரியவில்லை.

இதுதொடர்பாக முடிவை மேற் கொள்ள தனி குழு உள்ளது. அவர்கள் விதிகளின்படி நடப்பார்கள். அணியின் சிறப்பான செயல்பாடு என்பது அணியில் உள்ள ஒவ்வொரு பகுதியின் சிறந்த பங்களிப்பின் மூலம் கிடைப்பதாகும்.

ஒரு தனிப்பட்ட நபரின் ஆதாரத்தில் இருந்து அல்ல. எல்லாருமே கடினமாக உழைக்கிறார்கள், ஒருவரை விட ஒருவர் அதிகமாக இல்லை” என்று கோலி உதிர்த்த வார்த்தைகள் கும்ப்ளே மீதான கோபத்தின் உச்சமாகவே தெரிந்தது.

அனில் கும்ப்ளே இதுவரை வெளிப் படையாக எதுவும் தெரிவிக்கவில்லை. இந்தியாவுக்காக நீண்ட காலம் விளையாடிய அவர் அணியின் நலன் கருதி அமைதியாகவே இருப்பதாக தெரிகிறது. சாம்பியன்ஸ் டிராபி தொடர் முடிவடைந்ததும் (ஜூன் 18-ம் தேதி) அவர் தனது மவுனத்தை கலைக்கக்கூடும்.

தற்போது நடைபெற்று வரும் சம்பங்வகளால் கும்ப்ளே ஏமாற்றம் அடைந்திருக்கக்கூடும். அவர் பயிற்சியாளராக பொறுப்பேற்ற பின்னர் இந்திய அணி டி 20 வடிவத்தில் மட்டுமே ஒரே ஒரு தொடரை இழந்திருந்தது. பயிற்சியாளராக மட்டும் இல்லாமல் வீரர்களின் சம்பள ஒப்பந்தம் தொடர்பாக துணிச்சலாக, ஆதிக்கவாதிகள் மிகுந்த பிசிசிஐ முன்பு பேச்சுவார்த்தை நடத்தும் நபராகவும் கும்ப்ளே உயர்ந்திருந்தார்.

தற்போது புதிய பயிற்சியாளரை தேர்ந்தெடுக்கும் பொறுப்பு சச்சின், கங்குலி, லட்சுமண் ஆகியோரை கொண்ட பிசிசிஐ ஆலோசனைக் குழுவிடம் மீண்டும் சென்றுள்ளது. கடந்த முறை தேர்வின் போது இவர்களின் உந்துதல் காரண மாகவே பயிற்சியாளராக அனுபவம் இல்லாத போதிலும், இறுதி தேர்வு பட்டியலில் கும்ப்ளே இடம் பெற்றார்.

ஆனால் மீண்டும் அவர்கள் அது போன்ற ஒரு நடவடிக்கையை எடுக்க முடியுமா என்பது தெரியவில்லை. தற்போது கங்குலி இங்கிலாந்தில் உள்ளார். அவர் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான வர்ணணையாளர் குழுவில் இடம் பெற்றுள்ளார். அவர் மூலமாக கும்ப்ளேவுக்கும், விராட் கோலிக்கும் இடையிலான மோதலை முடிவுக்கு கொண்டு வர பிசிசிஐ நிர்வாகிகள் குழு முயன்று வருகிறது.

கடந்த ஜூன் மாதம் கும்ப்ளேவை நியமிக்கும் போதே, அவரது ஒப்பந்தம் ஒருவருட காலம் தான். அதன் பின்னர் அவரது திறன் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப் பட்டிருந்தது.

பயிற்சியாளர் என்பவர் இந்திய கிரிக்கெட்டுக்கு நன்மை பயப்பவராக இருக்க வேண்டும். மேலும் அடுத்த 8-10 ஆண்டுகளுக்கு இந்திய கிரிக்கெட்டை முன்னகர்த்திச் செல்வதற்கான செயல் திட்டங்களுடன் கூடிய தொலைநோக்குடையவராக பயிற்சியாளர் செயல்பட வேண்டும்.

கும்ப்ளேவின் பயிற்சி காலத்தில் இந்திய அணி உள்ளூர் சீசனில் 13 டெஸ்ட் போட்டிகளில் ஒரு தோல்வி மட்டுமே கண்டது. போட்டிகளின் முடிவுகள் அவருக்கு சாதகமாக இருந்த போதிலும் மீண்டும் பயிற்சியாளர் எனும் ‘கனியை’ கொறிக்க ‘அனில்’ கும்ப்ளேவுக்கு வாய்ப்பு கிடைக்குமா என்பது மும்மூர்த்திகளின் கையில்தான் உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x