Last Updated : 04 Nov, 2014 07:54 PM

 

Published : 04 Nov 2014 07:54 PM
Last Updated : 04 Nov 2014 07:54 PM

என்னை அணிக்கு திரும்பவிடாமல் தடுத்தார் கிரேக் சாப்பல்: ஜாகீர்கான் கடும் தாக்கு

நான் பயிற்சியாளராக இருக்கும் வரை நீங்கள் இந்திய அணிக்காக விளையாட முடியாது என முன்னாள் பயிற்சியாளரான கிரேக் சாப்பல் என்னிடம் தெரிவித்தார். அவர் பயிற்சியாளராக இருந்த தருணம் இந்திய கிரிக்கெட்டின் இருண்டகாலம் என இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர்கான் தெரிவித்துள்ளார்.

சச்சின் தனது சுயசரிதையான “பிளேயிங் இட் மை வே” என்ற புத்தகத்தில் 2007 உலகக் கோப்பை போட்டிக்கு முன்னதாக திராவிடை கேப்டன் பதவியிலிருந்து நீக்க கிரேக் சாப்பல் முயற்சித்தார் என்பது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறியிருக்கும் நிலையில், ஜாகீர்கான் மேலும் கூறியிருப்பதாவது:

2005-ல் இந்திய அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட சாப்பல், ஒரு முறை என்னிடம் வந்து நான் பயிற்சியாளராக இருக்கும் வரை நீங்கள் இந்திய அணிக்காக விளையாட முடியாது என்றார். அப்போது நான் அதிர்ச்சியில் உறைந்து போனேன். என்ன செய்வதென்றே தெரியவில்லை? அவரை எதிர்ப்பதா? நடந்த விஷயம் பற்றி கேப்டனிடம் சொல்வதா? சாப்பல் சொல்வதை சரி என ஏற்றுக்கொள்வதா? அவர் ஏன் என்னிடம் இப்படி பேசுகிறார் என எதுவுமே தெரியாமல் நிலைகுலைந்து போனேன்.

இந்திய கிரிக்கெட்டில் 2005 முதல் 2007 வரையிலான காலம் மிகவும் மோசமான இருண்ட காலம். சாப்பலின் திட்டத்துக்கு தலையை ஆட்டாவிட்டால் அணியிலிருந்து வெளியேறுவதற்கு தயாராகிக் கொள்ள வேண்டும் என்பதை மட்டும் அப்போது புரிந்துகொண்டேன். அணியில் மூத்த வீரர்களுக்கும் சாப்பலுக்கும் இடையே மோதல்போக்கு நிலவியது. ஓர் ஆண்டுகாலம் அணியில் இல்லாமல் இருந்த நேரத்தில் நான் மீண்டும் இந்திய அணிக்கு திரும்புவதற்கு முயற்சித்தபோது அதை பல வழிகளில் தடுக்க சாப்பல் முயற்சித்திருக்கிறார்.

எனது பெயர் தேர்வுக்குழுவில் விவாதிக்கப்பட்டபோதெல்லாம் 3 அல்லது 4 மாதம் கழித்து அவரை சேர்த்து கொள்ளலாம் என சாப்பல் கூறியதை பின்னர் தெரிந்துகொண்டேன். நான் தென் ஆப்பிரிக்க தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடித்தபோது சாப்பலால் ஏற்பட்ட கசப்பான விஷயங்களை தவிர்த்துவிட்டு சிறப்பாக விளையாடுவது என முடிவு செய்தேன். ஏனெனில் நான் பாதுகாப்பற்ற எண்ணத்தோடு விளையாட விரும்பவில்லை.

உலகக் கோப்பை போட்டிக்கு முந்தைய 4 மாதத்தில் அவருடன் நாங்கள் பெரிய அளவில் பேசிக்கொள்ளவில்லை. ஆனால் போராட்டத்தில் நான் வெற்றி பெற்றுவிட்டதையும், சாப்பல் தனது தோல்வியை நினைத்து போராடிக் கொண்டிருப்பதையும் உணர்ந்தேன். இந்திய வீரர்களை மட்டுமல்ல, இப்போதைய ஆஸ்திரேலிய வீரர்கள் சாப்பலை பற்றி என்ன நினைக்கிறார்கள் என அவர்களிடம் கேளுங்கள். நாங்கள் சொல்வதற்கும், அவர்கள் சொல்வதற்கும் பெரிய வித்தியாசம் இருக்காது என நான் சவால் விடுக்கிறேன்.

2008-ல் ஆஸ்திரேலிய அணியின் ஆலோசகராக கிரேக் சாப்பல் இருந்தார். அவரை டிரெஸ்ஸிங் அறையில் பார்த்தபோது கொந்தளித்துப் போனேன். அந்த கோபம்தான் அந்தத் தொடரில் நான் சிறப்பாக செயல்படவும், என்னை நிரூபிக்கவும் உதவியது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x