10 ஆயிரம் ரன்கள் குவித்து யூனுஸ்கான் சாதனை

10 ஆயிரம் ரன்கள் குவித்து யூனுஸ்கான் சாதனை
Updated on
1 min read

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 58 ரன்கள் சேர்த்த பாகிஸ்தான் சீனியர் பேட்ஸ்மேன் யூனுஸ்கான் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் 10 ஆயிரம் ரன்களை கடந்து சாதனை படைத்தார்.

மேற்கிந்தியத் தீவுகள்-பாகிஸ் தான் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ஜமைக்காவில் நடைபெற்று வருகிறது. இதன் முதல் இன்னிங்ஸில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 95 ஓவர்களில் 286 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ராஸ்டன் சேஸ் 63, டவுரிச் 56, ஜேசன் ஹோல்டர் 57 ரன்கள் எடுத்தனர். பாகிஸ்தான் தரப்பில் முகமது அமீர் 6 விக்கெட்கள் கைப்பற்றினார்.

இதையடுத்து முதல் இன்னிங்ஸை விளையாடிய பாகிஸ்தான் அணி 3-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 78.2 ஓவரில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 201 ரன்கள் எடுத்தது. மிஸ்பா உல்-ஹக் 5, ஆசாத் ஷபிக் 5 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

முன்னதாக அசார் அலி 15, அகமது சேஷசாத் 31 ரன்களில் ஆட்டமிழந்தனர். 54 ரன்களுக்கு 2 விக்கெட்கள் இழந்த நிலையில் பாபர் அசாம், யூனுஸ்கான் ஜோடி சிறப்பாக விளையாடியது.

யூனுஸ்கான் 138 பந்துகளில், ஒரு சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 58 ரன்களும், பாபர் அசாம் 201 பந்துகளில், ஒரு சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் 72 ரன்களும் எடுத்து கபேரியல் பந்தில் ஆட்டமிழந்தனர். இந்த ஆட்டத்தில் யூனுஸ்கான் 23 ரன்களை சேர்த்த போது டெஸ்ட் போட்டிகளில் 10 ஆயிரம் ரன்களை கடந்தார்.

இதன் மூலம் டெஸ்ட் போட்டிகளில் 10 ஆயிரம் ரன்களை கடந்த முதல் பாகிஸ்தான் வீரர் என்ற சாதனையை யூனுஸ்கான் படைத்தார். உலகளவில் 10 ஆயிரம் ரன்களை கடந்த 13-வது வீரரும் ஆனார். 39 வயதான யூனுஸ்கான், இந்த தொடருடன் ஓய்வு பெற உள்ளதாக ஏற்கெனவே அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேற்கிந்தியத் தீவுகளில் முதன் முறையாக டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய யூனுஸ்கான், ராஸ்டன் சேஸ் பந்தில் பவுண்டரி அடித்து 10 ஆயிரம் ரன்கள் என்ற மைல் கல்லை எட்டினார்.

10 ஆயிரம் ரன்கள் சாதனையை யூனுஸ்கான் தனது 116-வது டெஸ்ட் போட்டியில் நிகழ்த்தி உள்ளார். இதில் 34 சதங்களும், 33 அரை சதங்களும் அடங்கும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in