தேவை விதியின் விளக்கம் - என்றால் என்ன?

தேவை விதியின் விளக்கம் - என்றால் என்ன?
Updated on
1 min read

தேவை விதி என்பது, “மற்றவை மாறாமல் இருக்க, ஒரு பொருளின் தேவை அளவிற்கும், அதனின் விலைக்கும் எதிர்மறை உறவு உண்டு” என்பதாகும்.

ஒரு பொருளின் இருப்பு அதிகரிக்கும்போது அப்பொருளின் இறுதிநிலைப் பயன்பாடு குறையும் என்பது நமக்கு தெரியும். இந்த குறைந்து செல்லும் இறுதிநிலை பயன்பாடுதான் ‘விலைக்கும் தேவைக்கும் உள்ள எதிர்மறை உறவுக்கு’ ஒரு முக்கியக் காரணம். எனவே, ஒரு பொருளை அதிகமாக வாங்க வைக்க விலையை குறைக்கவேண்டும்.

ஒரு பொருளின் விலையேற்றத்தை இரண்டு பகுதிகளாக பிரிக்கின்றனர். ஒன்று வருமான விளைவு, மற்றொன்று பதிலீட்டு விளைவு.

என்னிடம் ரூ10 இருக்கிறது. ஒரு மிட்டாயின் விலை ரூ1 என்று இருந்தால், என்னிடம் உள்ள பணத்தின் உண்மை மதிப்பு 10 மிட்டாய்கள்; ஒரு மிட்டாயின் விலை ரூ2 என்று அதிகரித்தால், என்னிடம் உள்ள பணத்தின் மதிப்பு 5 மிட்டாய்கள்.

எனவே, பொருட்களின் விலையேறும்போதெல்லாம் என் வருவாயின் உண்மை மதிப்பு குறைகிறது. விலையேற, உண்மை வருவாய் குறைய, என் வாங்கும் திறன் குறைந்து பொருளின் தேவையும் குறைகிறது. இதுதான் வருமான விளைவு.

நாம் எப்போதும் விலையை ஒப்பீட்டு அளவில்தான் பார்க்கிறோம். அதாவது, ஒரு பொருளின் விலை, அதன் பதிலீட்டு பொருளின் (Substitute) விலையோடு ஒப்பிட்டு பார்ப்பது. மிட்டாயும் கேக்கும் ஒன்றுக்கொன்று பதிலீட்டு பொருட்கள் என்று வைத்துக்கொள்வோம். மிட்டாயின் விலை உயர்ந்து, கேக்கின் விலை நிலையாக இருந்தால், ஒப்பீட்டு அளவில் கேக் விலை குறைந்ததாகிவிடுகிறது. இதனால், மிட்டாயின் விலை உயரும் போது மிட்டாயின் தேவை குறைந்து கேக்கின் தேவை உயர்கிறது. இதனை பதிலீட்டு விளைவு என்கிறோம்.

விலையேற்றத்தினால் ஏற்படும் வருமான, பதிலீட்டு விளைவுகள் ஒரே திசையில் சென்று தேவை அளவிற்கும், விலைக்கும் எதிர்மறை உறவினை ஏற்படுத்துகின்றன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in