அகில இந்திய வாலிபால்: சென்னை ஐ.ஓ.பி. அணி சாம்பியன்

அகில இந்திய வாலிபால்: சென்னை ஐ.ஓ.பி. அணி சாம்பியன்

Published on

தூத்துக்குடியில் நடைபெற்ற டி.எம்.பி. கோப்பைக்கான அகில இந்திய வாலிபால் போட்டி ஆடவர் பிரிவில், சென்னை ஐ.ஓ.பி. அணி சாம்பியன் பட்டம் வென்றது.

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி மற்றும் தூத்துக்குடி மாவட்ட வாலிபால் கழகம் சார்பில் டி.எம்.பி. கோப்பைக்கான 23-வது அகில இந்திய வாலிபால் போட்டி, தூத்துக்குடி எஸ்.ஏ.வி. பள்ளி மைதானத்தில் கடந்த 10-ம் தேதி தொடங்கியது.

ஆடவர் பிரிவில் 7 அணிகளும், மகளிர் பிரிவில் 5 அணிகளும் கலந்து கொண்டன. தினமும் மாலை 6 மணிக்கு மேல் மின்னொளியில் போட்டிகள் நடைபெற்றன. இறுதி ஆட்டங்கள் ஞாயிற்றுக்கிழமை இரவு நடை பெற்றன.

மகளிர் பிரிவு இறுதி ஆட்டத்தில் மும்பை மத்திய ரயில்வே அணியும், கேரளா போலீஸ் அணியும் மோதின. இதில் மத்திய ரயில்வே அணி 25- 23, 27- 25, 25- 20 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது. அந்த அணிக்கு டி.எம்.பி. கோப்பை மற்றும் ரூ. 35 ஆயிரம் ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது. மகளிர் பிரிவில் கேரளா போலீஸ் அணி இரண்டாம் இடத்தை பிடித்தது.

ஆடவர் பிரிவு இறுதி ஆட்டத்தில் டேராடூன் ஓ.என்.ஜி.சி. அணியும், சென்னை ஐ.ஓ.பி. அணியும் மோதின. இதில் ஐ.ஓ.பி. அணி 25- 18, 27- 25, 25- 21 என்ற புள்ளிக்கணக்கில் வென்றது. இதன் மூலம் ஐ.ஓ.பி. அணிக்கு டி.எம்.பி. கோப்பை மற்றும் ரூ. 50 ஆயிரம் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது. இரண்டாம் இடம் பிடித்த ஓ.என்.ஜி.சி. அணிக்கு கோப்பை மற்றும் ரூ. 30 ஆயிரம் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது.

பரிசளிப்பு விழாவில், எல். சசிகலா புஷ்பா எம்.பி., சிறப்பு விருந்தினராக பங்கேற்று பரிசு வழங்கினார். தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி பொது மேலாளர் (வணிக வளர்ச்சி) எஸ். செல்வன் ராஜதுரை தலைமை வகித்தார். மாவட்ட வாலிபால் சங்கத் தலைவர் ஜான் வசீகரன், செயலாளர் ரமேஷ்குமார் கலந்து கொண்டனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in