Published : 19 Aug 2015 03:29 PM
Last Updated : 19 Aug 2015 03:29 PM

சங்கக்காராவின் கடைசி டெஸ்ட் போட்டி: இந்திய அணிக்கு காத்திருக்கும் உண்மையான சவால்

இந்திய அணியின் பிரச்சினைகளை வீரர்களை பதிலீடு செய்வதன் மூலம் நிவர்த்தி செய்ய முடியாது. பிரச்சினை மேலும் ஆழமானது, அமைப்பு ரீதியானது.

கொழும்புவில் வியாழனன்று சரவணமுத்து ஓவல் மைதானத்தில் இலங்கையை இந்திய அணி தனது 2-வது டெஸ்ட் போட்டியில் எதிர்கொள்கிறது.

இந்த டெஸ்ட் போட்டியுடன் சங்கக்காரா ஓய்வு பெறுகிறார், அதற்காக இலங்கை தயாராகி வருகிறது. எனவே தொடரை வென்று அவரை சிறந்த முறையில் வழியனுப்ப இலங்கை அணி தீவிரமாக முனைப்பு காட்டும் என்பதால் இந்திய அணிக்கு பெரும் சவால் காத்திருக்கிறது என்றே கூற வேண்டும்.

இதற்காக ஒருவேளை பேட்டிங் சாதக ஆட்டக்களம் இடப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஆனால் எப்படியிருந்தாலும் இயல்பாகவே இலங்கை பிட்ச்களில் ஸ்பின் பந்துவீச்சு எடுக்கும்.

கடந்த டெஸ்ட் தோல்வி ஏன்?

கால்லே டெஸ்ட் போட்டியில் ஆட்டத்தின் 70-80% தருணங்களில் ஆதிக்கம் செலுத்திய பிறகு சண்டிமால் மற்றும் ரங்கன்னா ஹெராத் ஆதிக்கம் செலுத்திய 2 தருணங்களில் கோட்டை விட்டனர். முதல் இன்னிங்ஸிலேயே தவண், கோலி, சஹா தவிர மற்றவர்கள் சரியாக ஆடாததை கவனத்தில் கொள்ள வேண்டும்.

2-வது இன்னிங்ஸில் 150 ரன்கள் இலக்கே துரத்தக் கடினம் என்றே கணிக்கப்பட்டது. ஆனால் எப்படியிருந்தாலும் 175 ரன்களை 9 விக்கெட்டுகளை இழந்தாவது வென்றிருக்க வேண்டும் என்பதே முக்கியம். லஷ்மண் ஒருமுறை இசாந்த் சர்மாவை வைத்துக் கொண்டு ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது நினைவில் இருக்க வேண்டும். இதைவிட மோசமான குழிப்பிட்ச்களில் சுனில் கவாஸ்கர், சச்சின் டெண்டுல்கர் எப்படி ஆடியுள்ளனர் என்பது பற்றி அணியினருக்கு கற்றுக் கொடுக்க இன்று ஆளில்லை.

3-ம் நாள் ஆட்டத்தின் போது 95/5 என்ற நிலையிலிருந்து இலங்கையை எழும்ப விட்டது ஒன்று இந்தியாவின் டி.ஆர்.எஸ். பற்றிய பிடிவாதமும், யோசனையற்ற கேப்டன்சியுமே.

டி.ஆர்.எஸ். பற்றி நிறைய பேசியாகிவிட்டது, மோசமான நடுவர் தீர்ப்புகளால் இலங்கை வெற்றி பெற்றது என்பதை இலங்கை அணியினரே மறுக்கவில்லை. காரணம் ஏன் டி.ஆர்.எஸ். திட்டத்தை இந்திய அணி நிர்வாகம் மறுக்க வேண்டும் என்பதாகவே அவர்களது வாதமாகவும் உள்ளது.

விராட் கோலி, ரஹானே, சஹா, திரிமானே, இருமுறை சண்டிமால் தீர்ப்புகள் தவறு எனவே 6 முறையும் இந்திய அணிக்கு எதிராகச் சென்றது தீர்ப்பு. இது தோல்வியில் மிகப்பெரிய பங்கு வகித்தது என்பதை மறுக்க முடியாது.

ஆனாலும் சண்டிமால் அப்படி அடிக்கக்கூடிய பெரிய பேட்ஸ்மென் இல்லை. அவருக்கு அன்று தொட்டதெல்லாம் துலங்கியது, காரணம் கோலியின் கேப்டன்சி.

மேத்யூஸ், இந்தியா 2-வது இன்னிங்ஸை ஆடும் போது நீண்ட நேரம் ஹெராத், கவுஷல் பந்துவீச்சை தொடர்ந்தார். ஆனால் கோலியோ சண்டிமால், திரிமானே, ஜெஹன் முபாரக் ஆடும் போது பந்து வீச்சை மாற்றிக் கொண்டேயிருந்தார். அஸ்வின், மிஸ்ரா பந்துவீச்சை தொடர்ந்திருக்க வேண்டும், ஆனால் மாறி மாறி இசாந்த், வருண் ஆரோன், ஹர்பஜன் என்று 5 ஓவர்களுக்கு ஒரு முறை பந்து வீச்சை மாற்றினார்.

பிறகு கள வியூகமும் சற்றே தளர்த்தப்பட்டிருக்க வேண்டும், ஆனால் தளர்த்தப்படவில்லை. சண்டிமாலுக்கு வலை விரித்திருக்க வேண்டும், ஆனால் வெறுமனே பீல்டிங்கை மாற்றுவதும் பந்துவீச்சை மாற்றுவதுமாக சிந்தனையற்று, உத்தியற்று இருந்தது விராட் கோலியின் கேப்டன்சி. ஒரு சில தருணங்களில் தோனியை நினைவூட்டியது. தோனியும் அப்படித்தான் ஆட்டத்தை வெற்றி பெறும் நிலையிலிருந்து சுலபமாக கைகழுவி விட்டுவிடுவார். சண்டிமால் ஒரு 70-75 ரன்கள் எடுக்கும் வீரர் அவ்வளவே, அவரை அவ்வளவு ரன்கள் எடுக்க அனுமதித்திருக்க கூடாது.

மேலும் அணியில் ஹர்பஜன் சிங், ரோஹித் சர்மா ஒரு சுமையாகவே மாறிவிட்டனர், ஹர்பஜன் சிங் பந்து வீச்சு ஐபிஎல் கிரிக்கெட்டினால் கெட்டுக் குட்டிச்சுவராகிவிட்டது, இனி அவரால் ஒழுங்கான ஒரு ஆஃப் ஸ்பின்னராக வீசவே முடியாது, அவரை மீண்டும் அணிக்கு அழைத்தது பின்னோக்கிய சிந்தனை. மாறாக பிராக்யன் ஓஜாவைத்தான் அணியில் வைத்திருக்க வேண்டும். நம் கேப்டன்களுக்கு டெய்ல் எண்டர்களும் பேட்டிங் செய்ய வேண்டும், அந்த மாயையில்தான் ஹர்பஜனை அணியில் எடுத்தனர், ஆனால் அவருக்கு ஒன்றும் வரவில்லை என்பதே உண்மை. இந்த அணியுடன் அவர் ஒட்டவேயில்லை.

அதே போல் ரோஹித் சர்மாவுக்கு பதில் புஜாராவுக்குத்தான் வாய்ப்பளிக்க வேண்டும், புஜாராவின் பிரச்சினை நன்றாக தொடங்கி பாதியில் விட்டுவிடுவதே, எனவே அவராவது ஒரு 35-40 ரன்களையாவது எடுப்பார், ஆனால் ரோஹித் சர்மாவுக்கு தொடக்கமே பிரச்சினைதான். தோனிக்கு ஒரு ரவீந்திர ஜடேஜா, ரெய்னா போல் தற்போது கோலிக்கு ஒரு ஹர்பஜன், ரோஹித் சர்மா இருந்து வருகின்றனர். தோனியின் கிரிக்கெட் தாக்கத்திலிருந்து முதலில் விடுபடுவது அவசியம்.

உள்நாட்டு பிட்ச்களின் மாறிவரும் தன்மை:

அயல்நாடுகளில் தொடர்ந்து, அதாவது 2 ஆஸ்திரேலிய, இங்கிலாந்து தொடர்களில் படுதோல்விகளைச் சந்தித்ததையடுத்து ஐபிஎல் கிரிக்கெட்டினால்தான் டெஸ்ட் கிரிக்கெட்டில் தோற்கிறோம் என்ற விமர்சனம் எழுந்தது, இது 75% உண்மையும் கூட. உடனே ஐபிஎல் கிரிக்கெட்டை ஒழித்து விடப்போகிறார்கள் என்று அஞ்சி உள்நாட்டு பிட்ச்களை பசுந்தரைகளாக மாற்றினர்.

அனைத்து உள்நாட்டு கிரிக்கெட் வாரியங்களுக்கும் பசுந்தரை பிட்ச் அமைக்குமாறு அறிவுறுத்தப்பட்டது, இதனால் ரஞ்சி போட்டிகளில் அணிகளில் 3 வேகப்பந்து வீச்சாளரும் ஒரு ஸ்பின்னரும் இடம்பெற்றனர், இதற்கு முன்னர் 2 வேகப்ப்பந்து வீச்சாளர் 2 ஸ்பின்னர்கள் அணியில் இருப்பர். ஆனால் பசுந்தரை அறிவுறுத்தலுக்குப் பிறகு ஒரேயொரு ஸ்பின்னர்தான் அணியில் இடம்பெறத் தொடங்கினர்.

இதனால் தரமான ஸ்பின் பந்து வீச்சை இப்போதைய பேட்ஸ்மென்கள் எதிர்கொள்வதில்லை. சரி பசுந்தரை பிட்சினால் நல்ல வேகப்பந்து வீச்சாளர்கள் உருவாகிறார்கள் என்றால் அதுவும் இல்லை, காரணம் பசுந்தரையில் வெறும் 120-125 கிமீ வேகத்தில் வீசியே ஸ்விங் செய்து உள்நாட்டு கிரிக்கெட்டில் தரமற்ற சில வேகப்பந்து வீச்சாளர்கள் கூட ஏதோ வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ் போன்று தெரியத் தொடங்கி, விக்கெட்டுகளை அள்ளினர், இப்படி உருவானவர்கள்தான் பிரவீண் குமார், புவனேஷ் குமார் போன்றவர்கள்.

ஆனால் அயல்நாட்டு பிட்ச் என்பது வேறு, அங்கு 140-145 கிமீ வேகம் தேவை நல்ல அளவு மற்றும் திசை தேவை, மாற்றுப்பந்துகளை வீசி பேட்ஸ்மென்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் பந்து வீச்சு தேவை, அவையெல்லாம் இல்லாமல் இந்திய கிரீன் டாப் பிட்ச்களில் அச்சுறுதலாக தெரிந்தவர்கள் அங்கு போய் உதை வாங்குகின்றனர். உதாரணமாக இங்கிலாந்தில் நல்ல ஸ்விங் பிட்ச்களில் கூட மொகமது ஷமியினால் விக்கெட்டுகளைக் கைப்பற்ற முடியவில்லை என்பதைப் பார்த்தோம்.

எனவே நல்ல ஸ்பின் பவுலர்களும் உருவாக முடியவில்லை, நல்ல வேகப்பந்து வீச்சாளர்களும் உருவாக முடியவில்லை, நீடித்து ஆடும் பேட்ஸ்மென்களும் அருகி வரும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த 10 அயல்நாட்டு டெஸ்ட் போட்டிகளில் (வங்கதேசம் நீங்கலாக) ஸ்பின் பவுலர்களிடம் இந்திய அணியினர் 57 விக்கெட்டுகளை பறிகொடுத்துள்ளனர், உண்மையில் சொன்னால் ஸ்பின் பவுலர்களிடம் டெஸ்ட் போட்டிகளை அயல்நாட்டில் இழந்துள்ளனர்.

இந்திய மண்ணின் பெருமை சுழற்பந்து வீச்சு. எனவே மீண்டும் சுழற்பந்து வீச்சு ஆட்டக்களங்கள் சிலவற்றை உருவாக்க வேண்டும், ஒருசில வேகப்பந்து வீச்சு ஆட்டக்களங்களும் அவசியம் தேவை, எனவே இதில் ஒரு சமச்சீரான கலவை தேவை. ஒரேயடியாக பசுந்தரை, இல்லையேல் ஒரேயடியாக குண்டும் குழியுமான பிட்ச் என்பதாகவே நமது அணுகுமுறை இருந்து வருகிறது, இல்லையெனில் இரு அணிகளும் 600 ரன்கள் அடிக்கும் ஒன்றுமேயில்லாத பிட்சைப் போடுவது... இப்படியாகத்தான் நமது நிர்வாகத்தின் கிரிக்கெட் சிந்தனை இருந்து வருகிறது.

உண்மையான பிட்ச்களை இடவேண்டும், முதல் ஓரிருநாட்களுக்கு வேகப்பந்து வீச்சுக்கும் அதன் பிறகு சுழற்பந்து வீச்சுக்கும் சாதகமான ஆட்டக்களங்கள் அமைக்கப்பட வேண்டும். எனவே இந்திய அணியின் தோல்வியின் பின்னணியில் ஆழமான காரணங்கள் உள்ளன, ஏதோ பவுலர்களை மாற்றுவது, பேட்ஸ்மென்களை மாற்றுவது அல்லது செய்தியாளர்கள் சந்திப்பில் எப்போதும் ‘ஆக்ரோஷமான ஆட்டம்’ ‘ஆக்ரோஷமான மனநிலை’ என்று பேசி போக்குக் காட்டும் பிரச்சினையல்ல இது.

இப்போதைக்கு இந்த அணியில் உள்ள வீரர்கள் தங்களுக்கென்று உத்திகளை வகுத்துக் கொண்டு இலங்கை பிட்சில் சுழற்பந்தை எதிர்கொண்டு வெற்றிக்கு ஆட வேண்டும் என்பதே சாத்தியமாகக் கூடியது.

ஏனெனில் இந்திய அணியின் பிரச்சினை இந்திய கிரிக்கெட்டின் சமகால நடைமுறை, அமைப்புமுறை ஆகியன சார்ந்தது. எனவே இதனை ஒருவருக்குப் பதிலாக இன்னொரு வீரர், அவர் இல்லையேல் மற்றொருவர் என்று பதிலீடு செய்வதன் பிரச்சினையல்ல, இது அதைவிடவும் ஆழமான பிரச்சினை என்பதை நினைவில் கொண்டு உள்நாட்டு கிரிக்கெட்டை வடிவமைப்பதில் மாற்றம் ஏற்படவேண்டும் என்பதை முதலில் உணர வேண்டும்.

இப்போதைக்கு முரளி விஜய் அணிக்கு திரும்பியுள்ளார், இவர் ஒரு உண்மையான டெஸ்ட் வீர்ர். நல்ல தற்காப்பு உத்தியுடன் ஷார்ட் தேர்விலும் அபாரமாக விளங்குகிறார்.

இந்த டெஸ்ட் போட்டியில் சங்கக்காராவுக்காக பேட்டிங் பிட்ச் அமைக்கப்படாமல் வெற்றிக்கான ஸ்பின் பிட்சையே இலங்கை தொடர்ந்தால் இந்திய அணி நிச்சயம் மேலும் ஒரு சவாலை எதிர்கொள்ளும்.

எனினும் ஒரு விறுவிறுப்பான ஆட்டம் நமக்கு காத்திருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x