Published : 10 Oct 2013 12:01 PM
Last Updated : 10 Oct 2013 12:01 PM

டி20: இந்தியா - ஆஸி. இன்று மோதல்

இந்திய-ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான ஒரேயொரு சர்வதேச இருபது ஓவர் கிரிக்கெட் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் வியாழக்கிழமை நடைபெறுகிறது.

7 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கு முன்னதாக நடைபெறும் இந்த இருபது ஓவர் போட்டியில் வென்று, வெற்றிப் பயணத்தைத் தொடங்கும் முனைப்பில் ஆஸ்திரேலிய அணியைச் சந்திக்கிறது தோனி தலைமையிலான இந்திய அணி.

இந்திய அணியில் உள்ள பெரும்பாலான வீரர்கள் சாம்பியன்ஸ் லீக், மேற்கிந்தியத் தீவுகள் ஏ அணிக்கெதிரான போட்டிகளில் விளையாடிவிட்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் களமிறங்குகின்றனர். இரண்டு மாத ஓய்வுக்குப் பிறகு சர்வதேசப் போட்டியில் மீண்டும் களமிறங்கும் தோனி, இந்தப் போட்டியை வெற்றியோடு தொடங்க காத்திருக்கிறார்.

யுவராஜ் சிங் ஜொலிப்பாரா?

கடும் பயிற்சிக்குப் பிறகு மீண்டும் இந்திய அணியில் இடம்பிடித்திருக்கும் அதிரடி ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங் மீது பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மேற்கிந்தியத் தீவுகள் ஏ அணிக்கெதிரான ஒருநாள் தொடர், இருபது ஓவர் போட்டி மற்றும் என்.கே.பி. சால்வே சேலஞ்சர் கோப்பை போட்டி ஆகியவற்றில் சிறப்பாக விளையாடி ரன் குவித்த கையோடு இந்தப் போட்டிக்கு திரும்பியுள்ளார் யுவராஜ் சிங்.

மேற்கிந்தியத் தீவுகள் ஏ அணிக்கெதிரான டி20 போட்டியில் 35 பந்துகளில் 52 ரன்கள் குவித்த யுவராஜ் சிங், ஆஸ்திரேலியாவுக்கு எதிராகவும் சிறப்பாக விளையாடி ரன் குவிப்பார் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர். யுவராஜ் சிங், பேட்டிங்கில் மட்டுமின்றி, பந்துவீச்சிலும் இந்திய அணிக்கு பலம் சேர்க்கிறார்.

பலம் வாய்ந்த பேட்டிங்

இந்திய அணி வலுவான பேட்டிங் வரிசையைக் கொண்டுள்ளது. தொடக்க ஆட்டக்காரர்களான ரோஹித் சர்மா, ஷிகர் தவண் ஆகியோர் நல்ல பார்மில் உள்ளனர். சமீபத்தில் முடிவடைந்த சாம்பியன்ஸ் லீக் போட்டியில் ருத்ரதாண்டவம் ஆடிய இவர்கள் இருவரும் இந்தப் போட்டியிலும் அதிரடியைத் தொடர்வார்கள் என நம்பலாம்.

மிடில் ஆர்டரில் விராட் கோலி, சுரேஷ் ரெய்னா, யுவராஜ் சிங், கேப்டன் தோனி என பலம் வாய்ந்த பேட்ஸ்மேன்கள் உள்ளனர். இவர்கள் அனைவருமே தனியொரு ஆளாக களத்தில் நின்று போட்டியின் போக்கை மாற்றக்கூடிய ஆற்றல் பெற்றவர்கள். சுரேஷ் ரெய்னா, சாம்பியன்ஸ் லீக் போட்டியில் 221 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது.

வேகப்பந்து வீச்சைப் பொறுத்தவரையில் புவனேஸ்வர் குமார், இஷாந்த் சர்மா ஆகியோர் முக்கியப் பங்கு வகிப்பார்கள். மூன்றாவது பௌலராக வினய் குமார், முகமது சமி, ஜெயதேவ் உனட்கட் ஆகிய மூவரில் ஒருவர் இடம்பெறலாம். சுழற்பந்து வீச்சில் அஸ்வின், ஜடேஜா ஆகியோர் பலம் சேர்க்கின்றனர். இதேபோல் யுவராஜ் சிங், ரெய்னா, ரோஹித் ஆகியோரும் பகுதிநேர பந்துவீச்சாளர்களாகப் பயன்படுத்தப்படலாம்.

சொந்த ஊரில்

கலக்குவாரா ஜடேஜா?

ஜெயதேவ் உனட்கட், இந்தப் போட்டியில் விளையாடும் பட்சத்தில் இது அவருடைய அறிமுக டி20 போட்டியாக இருக்கும். சௌராஷ்டிர வீரர்களான ரவீந்திர ஜடேஜா, ஜெயதேவ் உனட்கட் ஆகியோரின் சொந்த ஊரில் போட்டி நடைபெறுவதால், அவர்கள் இருவரும் சிறப்பாக விளையாட முயற்சிப்பார்கள்.

சொந்த ஊர் ரசிகர்கள் முன்னிலையில் முதல்முறையாக சர்வதேச டி20 போட்டியில் விளையாடவுள்ள ஜடேஜா, அதில் சிறப்பாக விளையாடி, சாம்பியன்ஸ் லீக் போட்டியில் சரியாக விளையாடாத குறையைத் தீர்ப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. பௌலர்கள் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் ஜடேஜா, இந்தப் போட்டியின் மூலம் மீண்டும் பார்முக்கு திரும்புவதில் தீவிரமாக உள்ளார்.

அனுபவமற்ற ஆஸி.

இந்தியாவைப் போலவே, ஆஸ்திரேலிய அணியும் இந்தப் போட்டியில் வெற்றி பெறும் முனைப்பில் உள்ளது. ஆஷஸ் தொடருக்கு முன்னதாக நடைபெறும் இந்தப் போட்டி அவர்களுக்கு மிக முக்கியமானதாகும். மூத்த வீரர்கள் ஓய்வு பெற்றுவிட்ட நிலையில், ஆஸ்திரேலிய அணியில் இடம்பெறுள்ளவர்களில் சிலர் மட்டுமே சர்வதேசப் போட்டியில் விளையாடிய அனுபவம் கொண்டவர்கள்.

எனினும் அந்த அணி வீரர்கள் கடுமையாகப் போராடக்கூடியவர்கள். சர்வதேசப் போட்டிகளில் விளையாடிய அனுபவம் இல்லாவிட்டாலும், ஆஸ்திரேலிய வீரர்களில் பெரும்பாலானோர் ஐபிஎல் மற்றும் சாம்பியன்ஸ் லீக் போட்டிகளில் விளையாடியுள்ளனர். அதனால் இந்திய ஆடுகளங்களின் தன்மை குறித்து நன்கு அறிந்து வைத்துள்ள ஆஸ்திரேலிய அணியினரை அவ்வளவு எளிதாக எடுத்துவிட முடியாது.

பலம் சேர்க்கும் ஆரோன், வாட்சன்

ஆஸ்திரேலியாவின் பேட்டிங் சற்று பலவீனமானதாக இருந்தாலும், அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களில் ஒருவரான ஆரோன் பிஞ்ச், சர்வதேச டி20 போட்டியில் அதிவேக சதமடித்தவர் என்ற சாதனையை இன்றளவும் தன்வசம் வைத்துள்ளார். ஷேன் வாட்சன், ஜார்ஜ் பெய்லி, கிளன் மேக்ஸ்வெல் என வலுவான பேட்ஸ்மேன்கள் அந்த அணிக்கு பலம் சேர்க்கின்றனர்.

சாம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டியில் விளையாடிய ஷேன் வாட்சன், ஜேம்ஸ் பாக்னர், நாதன் கோல்டர், கிளன் மேக்ஸ்வெல் ஆகியோர் இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் முக்கிய துருப்பு சீட்டாகத் திகழ்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சாம்பியன்ஸ் லீக்கில் மும்பை அணிக்காக விளையாடிய மேக்ஸ்வெல், இறுதிப் போட்டியில் 14 பந்துகளில் 37 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது.

மூத்த வீரரான ஷேன் வாட்சன் மற்றும் நாதன் கோல்டர் ஆகியோர் பேட்டிங், பௌலிங் என இரு துறைகளிலும் ஆஸ்திரேலிய அணிக்கு வலு சேர்க்கின்றனர். இதேபோல் விக்கெட் கீப்பர் பிராட் ஹாடின் எந்த நேரத்திலும் அதிரடியாக விளையாடி அணியை சரிவிலிருந்து மீட்கக்கூடியவர்.

பந்துவீச்சைப் பொறுத்தவரையில் மிட்செல் ஜான்சன், ஜேம்ஸ் பாக்னர், நாதன் கோல்டர் உள்ளிட்டோர் பலம் சேர்க்கின்றனர். சுழற்பந்து வீச்சைப் பொறுத்தவரையில் அந்த அணி சேவியர் டோஹெர்ட்டியை மட்டுமே நம்பியுள்ளது.

இதுவரைஇரு அணிகளும் இதுவரை 7 டி20 போட்டிகளில் மோதியுள்ளன. அதில் ஆஸ்திரேலியா 4 முறையும், இந்தியா 3 முறையும் வெற்றி பெற்றுள்ளன. ஆஸ்திரேலிய அணி கடைசியாக 2007-ல் இந்திய மண்ணில் டி20 போட்டியில் விளையாடியுள்ளது. மும்பையில் நடைபெற்ற அந்தப் போட்டியில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டது.

அணி விவரம்

இந்தியா: மகேந்திர சிங் தோனி (கேப்டன்), ஷிகர் தவண், ரோஹித் சர்மா, விராட் கோலி, சுரேஷ் ரெய்னா, யுவராஜ் சிங், ரவீந்திர ஜடேஜா, அஸ்வின், இஷாந்த் சர்மா, புவனேஸ்வர் குமார், வினய் குமார், முகமது சமி, ஜெயதேவ் உனட்கட், அமித் மிஸ்ரா, அம்பட்டி ராயுடு.

ஆஸ்திரேலியா: ஜார்ஜ் பெய்லி (கேப்டன்), நாதன் கோல்டர் நீல், சேவியர் டோஹெர்ட்டி, ஜேம்ஸ் பாக்னர், ஆரோன் பிஞ்ச், பிராட் ஹாடின், மோசஸ் ஹென்ரிக்ஸ், மிட்செல் ஜான்சன், நிக் மேடின்சன், கிளன் மேக்ஸ்வெல், கிளின்ட் மெக்காய், ஆடம் வோஜஸ், ஷேன் வாட்சன்.

வருண பகவான் வழிவிடுவாரா?

குஜராத்தில் கனமழை பெய்து வருவதால், போட்டி மழையால் பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது. வியாழக்கிழமையன்று ராஜ்கோட்டில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

கனமழை பெய்தாலும், போட்டி பாதிக்கப்படாது என சௌராஷ்டிர கிரிக்கெட் சங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மைதானத்தில் நல்ல வடிகால் வசதி உள்ளது. அதனால் கடந்த வாரம் தொடர்ச்சியாக 3 நாள்கள் மழை பெய்தபோதும், ஆடுகளம் மற்றும் மைதானப் பகுதி பாதிப்புக்குள்ளாகவில்லை. எனவே போட்டி தொடங்குவதற்கு 2 அல்லது 3 மணி நேரத்துக்கு முன்பு மழை பெய்து நின்றுவிட்டாலும், கொஞ்சம் கால தாமதமாக போட்டியை ஆரம்பித்துவிடலாம் என அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

எனினும் போட்டி நடைபெறும் நேரத்தில் மழை பெய்தால், எதுவும் செய்ய முடியாது. எனவே போட்டி நடப்பது வருண பகவானின் கையில்தான் உள்ளது.

மைதானம் எப்படி?

பிசிசிஐயின் மேற்கு பிராந்திய ஆடுகள பராமரிப்பாளர் தீரஜ் பிரசன்னா கூறுகையில், “ராஜ்கோட் மைதானம் பேட்டிங்குக்கு சாதகமானது. இந்த மைதானம் முதல் 5 ஓவர்கள் மட்டும் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும். அதன்பிறகு பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக மாறிவிடும். இங்கு பேட்ஸ்மேன்களால் எளிதாக ரன் சேர்க்க முடியும் என்பதால், பெரிய அளவில் ரன் குவிக்க வாய்ப்புள்ளது. 170 ரன்களுக்கு மேல் குவித்தால்தான் எதிரணிக்கு சவால் அளிக்கக்கூடிய ஸ்கோராக இருக்கும்” என்றார்.

உள்ளூர் ஆடுகள பராமரிப்பாளர் ரசிக் மக்வானா கூறுகையில், “இந்த ஆடுகளம் பேட்ஸ்மேன்களின் சொர்க்கமாகும். எனவே இங்கு முதலில் பேட் செய்யும் அணி 200 ரன்கன் குவித்தாலும், 2-வதாக பேட் செய்யும் அணி இலக்கை எட்ட வாய்ப்புள்ளது” என்றார். இந்த மைதானத்தில் 28 ஆயிரம் பேர் அமர்ந்து போட்டியை ரசிக்கலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x