

நியூஸிலாந்து அணியை வங்கதேசம் வீழ்த்தி சாம்பியன்ஸ் டிராபியிலிருந்து வெளியேற்றியதற்கு காரணமாக அமைந்த ஷாகிப் அல் ஹசனுடம் அமைத்த சாதனைக் கூட்டணி பற்றி மஹமுதுல்லா சில விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார்.
ஆட்டம் முடிந்த பிறகு அவர் கூறியதாவது:
எங்கள் கூட்டணியில் சிறப்பம்சம் நாங்கள் இருவரும் அதிகம் பேசிக்கொள்ளவில்லை. பேட்டிங் செய்தபடி இருந்தோம், ஆனால் தன்னம்பிக்கையுடன் ஆட முடிவெடுத்தோம்.
இன்னிங்ஸின் தொடக்கத்தில் பந்துகள் ஸ்விங் ஆயின. பிறகு ஸ்விங் ஆகவில்லை, இதனையடுத்து பேட்டிங் எளிதானது. இந்தத் தொடரில் தமீம் இக்பால் அருமையாக ஆடிவந்தார், ஆனால் அவரை தொடக்கத்தில் இழந்தது அதிர்ச்சி ஏற்படுத்தியது. நானும் ஷகிப் அல் ஹசனும் கள இடைவெளிகளில் பந்தை அடிப்பதிலும், மோசமான பந்தை அடித்து ஆடவும் விரும்பினோம், என்றார்.
ஆட்ட நாயகன் ஷாகிப் அல் ஹசன் கூறும்போது, “மஹமுதுல்லா கூறியது போல் நாங்கள் பேசிக்கொள்ளவில்லை. நாங்கள் இலக்கை துரத்துவதற்காக திட்டமிடவில்லை, முதலில் 40 ஓவர்கள் வரை பேட் செய்வோம், அப்போது என்ன நிலையில் இருக்கிறோம் என்று பார்த்துக் கொண்டு இலக்கு நோக்கி முயற்சி செய்வோம் என்று நினைத்தோம்.
ஐசிசி தொடரில் ஒரு போட்டியை வெல்வது என்பதே பெரிய விஷயம், இங்கிருந்து முன்னேற்றப்பாதையில்தான் செல்ல முடியும், என்றார்.