ஆஸ்திரேலிய தோல்விகளை ஆய்வு செய்யும் சென்னை நிறுவனம்

ஆஸ்திரேலிய தோல்விகளை ஆய்வு செய்யும் சென்னை நிறுவனம்
Updated on
1 min read

பாகிஸ்தானுக்கு எதிராக ஆஸ்திரேலியா அணி டெஸ்ட் போட்டியில் 2-0 என்று படுதோல்வி தழுவியது. இதனையடுத்து ஆஸ்திரேலிய அணியின் பிரச்சினை என்னவென்பதை ஆய்வு செய்ய கிரிக்கெட் ஆஸ்திரேலியா இந்திய நிறுவனம் ஒன்றின் உதவியை நாடியுள்ளது.

சென்னையில் உள்ள கிரிக்கெட் 21 என்ற ஆய்வு நிறுவனம் ஆஸ்திரேலியா-பாகிஸ்தான் தொடரை முழுமையாக ஆய்வு செய்ய நியமிக்கப்பட்டுள்ளது.

இதற்காக, முன்னாள் இந்திய முதல் தர கிரிக்கெட் வீரர்கள் பலரை பணியில் அமர்த்தியுள்ளது சென்னையைச் சேர்ந்த கிரிக்கெட் 21 நிறுவனம்.

துணைக்கண்ட பிட்ச்களில் ஆஸ்திரேலியாவின் பிரச்சினைகள் என்ன என்பதை முழுதும் ஆய்வு செய்ய ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் உயர் செயல் திறன் கமிட்டியின் தலைவர் பாட் ஹோவர்ட் முதன் முறையாக நிறுவனம் ஒன்றின் உதவியை நாடியுள்ளது.

துணைக் கண்டத்தில் கடைசி 15 டெஸ்ட் போட்டிகளில் 10 போட்டிகளில் ஆஸ்திரேலியா தோற்றது. 2011-ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிராக கால்லே மைதானத்தில் ஒரேயொரு வெற்றியை மட்டும் பெற்றுள்ளது ஆஸ்திரேலியா.

துணைக் கண்ட பிட்ச்களில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் பிரச்சினைகளை ஆஸ்திரேலியர்கள் அல்லாத பார்வையை பெறுவது அவசியம் என்று கருதியதால் சென்னை நிறுவனத்திடன் இந்தப் பணி ஒப்படைக்கப்பட்டுள்ளதாக ஹோவர்ட் தெரிவித்தார்.

ஏற்கெனவே கிரிக்கெட் ஆஸ்திரேலியாவுக்காக சில தொடர்களை கிரிக்கெட் 21 நிறுவனம் ஆய்வு செய்து கொடுத்துள்ளது. இந்த தொடரில் லெக் ஸ்பின்னர் யாசிர் ஷா, இடது கை சுழற்பந்து வீச்சாளர் சுல்பிகர் பாபர் ஆகியோர் பற்றிய விவரங்களையும் கிரிக்கெட் 21 நிறுவனம் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்திற்கு வழங்கியுள்ளது.

ஆனால் அதன் தகவல்கள் ஆஸ்திரேலிய அணிக்கு பயனளிக்கவில்லை. ஏனெனில் பாபர், யாசிர் ஷா டெஸ்ட் தொடரில் 26 விக்கெட்டுகளைப் பகிர்ந்து கொண்டனர்.

ஆஸ்திரேலியாவுக்கு உண்மையில் ஏற்பட்டுள்ள பயம் என்னவெனில் வங்கதேசத்திற்கு பயணம் மேற்கொள்ளும் அந்த அணி சுழலில் சிக்கி சின்னாபின்னமாகுமோ என்று கவலைப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in