

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்துக்கு மகாராஷ்டிர அணி தகுதி பெற்றுள்ளது.
இந்தூரில் நேற்று முடிவடைந்த முதல் அரையிறுதி ஆட்டத்தில் மகாராஷ்டிர அணி பெங்கால் அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது. கடந்த 18-ம் தேதி தொடங்கிய இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற மகாராஷ்டிரா முதலில் பந்து வீச முடிவு செய்தது.
இதையடுத்து முதல் இன்னிங்ஸை விளையாடிய பெங்கால் அணி 114 ரன்களுக்கு முதல் இன்னிங்ஸை இழந்தது. சமத் ஃபாலா அதிகபட்சமாக 7 விக்கெட் வீழ்த்தினார். பின்னர் முதல் இன்னிங்ஸை விளையாடி மகாராஷ்டிரா 455 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் அடிட்கர் அதிகபட்சமாக 168 ரன்கள் எடுத்தார்.
இதையடுத்து 341 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை பெங்கால் அணி ஓரளவுக்கு தாக்குப் பிடித்து விளையாடி 348 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இதனால் 8 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கு மகாராஷ்டிரத்துக்கு நிர்ணயிக்கப்பட்டது.
இதில் விக்கெட் இழப்பின்றி 8 ரன்களை எடுத்து வென்ற மகாராஷ்டிரம் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றது. மொஹாலியில் நடைபெற்று வரும் 2-வது அரையிறுதி ஆட்டத்தில் பஞ்சாப் மற்றும் கர்நாடக அணிகள் விளையாடி வருகின்றன. இதில் வெற்றி பெறும் அணி இறுதி ஆட்டத்தில் மகாராஷ்டிரத்தை எதிர்கொள்ளும். இறுதி ஆட்டம் ஜனவரி 29-ம் தேதி ஹைதராபாதில் தொடங்குகிறது.