

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி பயிற்சியாளர் மிக்கி ஆர்த்தரை நீக்க வேண்டும் என முன்னாள் பாகிஸ்தான் வீரர் முகமது யூசுஃப் கூறியுள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை நடந்த சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் பாகிஸ்தான் அணி இந்தியாவிடம் படுதோல்வி அடைந்தது. சிறிய போட்டி, போராட்டம் இன்றி பாகிஸ்தான் அணி பரிதாபமான தோல்வியை தழுவியது குறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர்கள் பலர் அதிருப்தி தெரிவித்துள்ளனர். தற்போது முகமது யூசுஃப் அந்த அதிருப்தி வசையில் இணைந்துள்ளார்.
"ஆர்த்தரால் பாகிஸ்தான் வீரர்களிடம் ஒரு நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. தற்போது பாகிஸ்தான் ஐசிசி தரவரிசையில் 8ஆம் இடத்துக்கு இறங்கியுள்ளது ஏன் என ஒப்புக்கொள்ள வேண்டிய நேரம் இது.
பந்துவீச்சாளர்கள் தேர்வு சரியாக இல்லை. எதை வைத்து இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஜுனைத் கானும், வலது கை வேகப்பந்து வீச்சளர் ஹசன் அலியும் ஒரே மாதிரியான பந்துவீச்சாளர்கள் என அவர் சொன்னார் என்று தெரியவில்லை. இருவருக்கும் என்ன ஒற்றுமை இருக்கிறது?
இதற்கு முன் பாகிஸ்தான் பல முறை வெற்றி கண்ட இந்தியாவுக்கு எதிராக இவ்வளவு பெரிய தோல்வி வெட்கக்கேடானது மட்டுமல்ல, ஏற்றுக்கொள்ள முடியாததும் கூட". இவ்வாறு முகமது யூசிஃப் பேசியுள்ளார்.
கடந்த மூன்று ஆண்டுகளில் எந்த ஐசிசி போட்டியிலும் பாக். அணி இந்தியாவை வெல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.