ஆமாம், அனுஷ்காவை காதலிக்கிறேன்: கோபத்தில் சிலிர்த்த கோலி

ஆமாம், அனுஷ்காவை காதலிக்கிறேன்: கோபத்தில் சிலிர்த்த கோலி
Updated on
1 min read

ஆமாம், நடிகை அனுஷ்கா சர்மாவை காதலிக்கிறேன். ஆனால் இது எங்களுடைய தனிப்பட்ட விஷயம். இந்த விஷயத்தில் மற்றவர்கள் அதிகம் தலையிடாமல் பகுத்தறிவோடு நடந்துகொள்ள வேண்டும் என இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி கோபத்தோடு பேசியுள்ளார்.

கோலியும், அனுஷ்கா சர்மாவும் காதலித்து வருவதாக கடந்த 2 ஆண்டுகளாக செய்திகள் வெளியாகி வந்தன. இவர்கள் இருவரும் இணைந்து பொது இடங்களுக்கு சென்ற படங்களும் வெளியாகி இருந்தன.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்ட கோலியிடம் அவருடைய காதல் பற்றி கேள்வியெழுப்பப்பட்டபோது கடும் கோபமடைந்த அவர், “ஆமாம் நாங்கள் இருவரும் காதலிக்கிறோம். ஆனால் எங்களின் தனிப்பட்ட விஷயங்களுக்கு மற்றவர்கள் மதிப்பளிக்க வேண்டும்.

நாங்கள் எதையும் மறைக்கவில்லை. மறைப்பதற்கு முயற்சிக்கவும் இல்லை. எதையும் மறைக்க வேண்டிய அவசியமும் இல்லை. ஆனால் நீங்கள் ஒரே விஷயத்தைப் பற்றி மீண்டும் மீண்டும் கேட்டு அது விவாதப் பொருள் ஆவதை நாங்கள் விரும்பவில்லை.

நானும், அனுஷ்காவும் காதலிப்பது தெரிந்த பிறகும், நாங்கள் இருவரும் ஒன்றாக சுற்றுவதைப் பார்த்த பிறகும் நீங்கள் காதலிப்பது உண்மையா என்று கேட்கிறார்கள். எனவே இந்த விஷயத்தில் மற்றவர்கள் நாகரிகமாக நடந்துகொள்ள வேண்டும்.

உங்களுக்கு ஒரு விஷயத்தைப் பற்றி தெரிகிறது என்றால், பிறகு ஏன் அதையே மீண்டும் மீண்டும் கேட்கிறீர்கள்? இது எங்களுடைய தனிப்பட்ட விஷயம். அதைப் பற்றி நாங்கள் வெளிப்படையாக பேச விரும்பவில்லை. எங்களின் உணர்வுகளுக்கு ஊடகங்களும், மற்றவர்களும் மதிப்பளிக்க வேண்டும்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in