

துபையில் நடைபெற்று வரும் துபை ஓபன் டென்னிஸ் போட்டியில் ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் 2-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
சர்வதேச தரவரிசையில் 8-வது இடத்தில் இருப்பவரான ஃபெடரர் தனது முதல் சுற்றில் 6-1, 6-4 என்ற நேர் செட்களில் சர்வதேச தரவரிசையில் 40-வது இடத்தில் இருப்பவரான ஜெர்மனியின் பெஞ்சமின் பெக்கரைத் தோற்கடித்தார்.
ஆரம்பம் முதலே அபாரமாக ஆடிய ஃபெடரர் இந்தப் போட்டியை 62 நிமிடங்களில் முடிவுக்கு கொண்டு வந்தார். போட்டிக்குப் பிறகு பேசிய செய்தியாளர்களைச் சந்தித்த ஃபெடரர், “இப்போதும் உயர்தரமான டென்னிஸைத்தான் ஆடி வருகிறேன். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவதற்கு முதலிடத்தில் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. கடந்த ஆஸ்திரேலிய ஓபனில் விம்பிள்டன் சாம்பியன் ஆன்டி முர்ரே, முன்னணி வீரரான தாமஸ் பெர்டிச் ஆகியோரை வீழ்த்தியிருக்கிறேன். என்னைப் பொறுத்தவரையில் நல்ல உடற்தகுதியுடன் இருக்க வேண்டும். தொடர்ந்து சிறப்பாக ஆடுவதோடு அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகளுக்கு முன்னேற வேண்டும். கடந்த ஓர் ஆண்டாகவே நான் நல்ல நிலையில் இருப்பதாக உணர்கிறேன்” என்றார்.