ஹைதராபாத் டெஸ்ட்: தோல்வியைத் தவிர்க்க வங்கதேசம் போராட்டம்

ஹைதராபாத் டெஸ்ட்: தோல்வியைத் தவிர்க்க வங்கதேசம் போராட்டம்
Updated on
1 min read

ஹைதராபாத்தில் நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியின் 4-ம் நாளான இன்று ஆட்ட முடிவில் வங்கதேசம் தன் 2-வது இன்னிங்சில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 103 ரன்கள் எடுத்து போராடி வருகிறது.

ஆட்ட முடிவில் ஷாகிப் அல் ஹசன் 21 ரன்களுடனும் மஹமுதுல்லா 9 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இவர்கள் இருவரும் 10.5 ஓவர்களில் 28 ரன்களைச் சேர்த்தாலும் அஸ்வின், ஜடேஜாவுக்கு எதிராக கடுமையாகத் திணறினர், பிட்ச் இப்போது ஸ்பின்னர்களை ஆடுவதற்கு கடினமாக மாறிவிட்டது.

முன்னதாக வங்கதேசம் இன்று காலை 322/6 என்று தொடங்கி தன் முதல் இன்னிங்சில் 388 ரன்களுக்குச் சுருண்டது, கேப்டன் முஷ்பிகுர் ரஹிம் தனது விக்கெட் கீப்பிங் தவறுகளுக்கு பேட்டிங்கில் ஈடுகட்டி 127 ரன்களை எடுத்தார், அருமையான டெஸ்ட் இன்னிங்ஸ் ஆகும் இது, தனிமனிதராக அவர் ஒரு முனையில் போராடி கடைசி விக்கெட்டாகவும், அஸ்வினின் சாதனை 250-வது விக்கெட்டாகவும் ஆட்டமிழந்தார்.

இந்திய அணியில் உமேஷ் யாதவ் 3 விக்கெட்டுகளையும் அஸ்வின், ஜடேஜா தலா 2 விக்கெட்டுகளையும் இசாந்த், புவனேஷ் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.

299 ரன்களை இந்தியா முன்னிலை பெற்றிருந்தாலும் தற்காலத்திய ஃபேஷனுக்கிணங்க இந்தியாவே மீண்டும் பேட் செய்தது, விஜய், ராகுல் விரைவில் அவுட் ஆகினர், ராகுல் தன் இடத்தைப் பாதுகாத்துக் கொள்வது அவசியம், கடினமாக உழைத்துப் பெற்ற இடம், தனது பொறுப்பற்ற ஆக்ரோஷத்தினால் அதனை இழந்து விடக்கூடாது.

23/2 என்ற நிலையில் விராட் கோலி 40 பந்துகளில் 2 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 38 ரன்களையும், புஜாரா 6 பவுண்டரி ஒரு ஹூக் சிக்ஸ் மூலம் 58 பந்துகளில் 54 ரன்களையும் எடுத்தனர், கோலி ஆட்டமிழந்தார், ரஹானே 28 ரன்களில் வெளியேறினார். ஜடேஜா ஒரு பவுண்டரி ஒரு சிக்ஸருடன் 16 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாக இருந்தார், புஜாரா அரைசதம் அடித்த பிறகு 159/4 என்ற நிலையில் கோலி டிக்ளேர் செய்தார்.

459 ரன்கள் என்ற இமாலய வெற்றி இலக்கினை எதிர்த்து களமிறங்கிய வங்கதேசம் தொடக்கத்தில் அஸ்வின் வீசுவார் என்பதை எதிர்பார்க்காத நிலையில் தமிம் இக்பாலை அஸ்வினிடம் 3 ரன்களில் இழந்தது. சவுமியா சர்க்கார் (42), மொமினுல் ஹக் (27 ) இணைந்து ஸ்கோரை 71 ரன்களுக்குக் கொண்டு சென்றனர். அப்போது சவுமியா சர்க்காரும் ஜடேஜா பந்தில் ரஹானேயிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 2 ஓவர்கள் சென்று அஸ்வினிடம் மொமினுல் வீழ்ந்தார், இதுவும் ரஹானே கேட்ச். ஆட்ட முடிவில் வங்கதேசம் 103/3.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in