Published : 22 Feb 2017 06:24 PM
Last Updated : 22 Feb 2017 06:24 PM

எல்லோரையும் போல்தான் கோலி, சீண்டினால் பாதிப்படைவார்: ஆஸி.க்கு ஸ்டீவ் வாஹ் யோசனை

வியாழனன்று முதல் டெஸ்ட் தொடங்கவுள்ள நிலையில் விராட் கோலி ஆஸ்திரேலிய முன்னாள், இந்நாள் வீரர்களிடத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார்.

விராட் கோலி (ஆக்)ரோஷமானவர், அவரை சீண்டினால் அவர் நிச்சயம் பதிலடி கொடுப்பார், இதனை நமக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொள்ளலாம் என்று சில வீரர்கள் கருதுகின்றனர், ஆனால் வேண்டாம் அது நல்லதல்ல என்று மைக் ஹஸ்ஸி எச்சரித்ததும் கவனிக்கத்தக்கது.

இந்நிலையில் எதிரணியினரின் ‘மனநிலையில் சீர்குலைவு’ ஏற்படுத்தும் உத்திக்குப் பெயர் பெற்ற ஸ்டீவ் வாஹ், விராட் கோலியின் ஆக்ரோஷம் பற்றி ஆஸ்திரேலிய இணையதளத்திற்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

விராட் கோலி ஒரு ஆதிக்கவாத கேப்டன், அவரை அவரது சவுகரிய பகுதியிலிருந்து வெளியே கொண்டு வர வேண்டும். எடுத்த எடுப்பிலேயே அவரை சீண்ட வேண்டும் என்று நான் கூறவில்லை, அவர் ரன்கள் எடுக்கத் தொடங்கினார் என்றால் ஸ்லெட்ஜிங்கை பயன்படுத்தலாம் என்றே கூறுகிறேன்.

காரணம் அனைவரையும் போல் அவரும் சீண்டினால் பாதிக்கப்படக் கூடியவர்தான். அவர் கடும் நெருக்கடியில் உள்ளார், ஒவ்வொரு முறை அவர் களமிறங்கும் போதும் அவர் சதம் அடிக்க வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்ப்பதால் அவரை இந்தச் சுமை அழுத்திக் கொண்டிருக்கிறது. ஆனாலும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அவர் நிறைவேற்றியே வருகிறார்.

ஆனால் சில வேளைகளில் அதிர்ஷ்டம் அவருக்கு எதிராகத் திரும்பலாம். மோசமான ஷாட், அல்லது கவனம் தவறுதல், அல்லது அடுத்து நாம் என்ன செய்ய வேண்டும் என்ற சிந்தனை அவர் அங்கு செய்ய வேண்டியதைத் தடுக்கலாம். எனவே இத்தகைய வாய்ப்புகளை எதிர்நோக்கி அதனை சரியாகப் பயன்படுத்த வேண்டும். ஏனெனில் அவர் எல்லா அணிகளுக்கு எதிராகவும் ரன்களை குவித்து வருகிறார்.

இது நவீனகால இந்திய அணி. விராட் கோலி நாம் எப்படி கிரிக்கெட் ஆட்டத்தை ஆடுகிறோமோ அப்படி ஆடக்கூடியவரே. அவர் நம் முகத்தருகே நிற்பார், தைரியமான முடிவுகளை எடுத்து அதில் நிற்பார். அவர் ஒரு பயங்கரமான போட்டியாளர், அவரைப் போன்ற ஒருவரை நான் பார்த்ததில்லை என்றே நினைக்கிறேன்.

ஒவ்வொரு பந்துக்கும் முன்னுரிமை அளிக்கிறார். அதாவது தன் வாழ்க்கையின் முக்கியமான பந்தே இதுதான் என்பது போல் ஆடுகிறார். இதனை அவர் பேட்டிங்கில் மட்டுமல்ல, களத்தில், கேப்டன் பொறுப்பிலும் கடைபிடிக்கிறார். மிகவும் கடினமான எதிர் அணி வீரர் கோலி, அவரிடமிருந்து உங்களுக்கு எந்தச் சலுகையும் கிடைக்கப் போவதில்லை. அவர் கடினமாக ஆடுவார். இந்திய கிரிக்கெட்டுக்கு அவர் ஒரு மகத்தான வீரர். எனவே அவரைப்போல உணர்வுடன் தான் அந்த அணி ஆடும். எவ்வளவு விரைவில் வெற்றி பெற முடியும் என்ற எண்ணத்தில்தான் ஆட்டத்தை அவர் நகர்த்துவார்.

எனவே ஆஸ்திரேலியாவுக்கு இது ஒரு உண்மையான சவாலான தொடர் என்பதில் சந்தேகமேயில்லை. தரமான பேட்ஸ்மென்கள், உலகத்தரம் வாய்ந்த ஸ்பின்னர்கள் என்று வெற்றி பெறுவது எப்படி என்பதை இந்திய அணியினர் அறிந்து வைத்துள்ளனர்.

இவ்வாறு கூறினார் ஸ்டீவ் வாஹ்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x